Tamilசெய்திகள்

திமுக ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தும் ஓபிஎஸ், இபிஎஸ்

தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்தபடி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல் விலையை 5 ரூபாயும், டீசல் விலையை 4 ரூபாயும் குறைக்க வேண்டும், கியாஸ் சிலிண்டருக்கு மானியம் ரூ.100 வழங்க வேண்டும், தமிழக பெண்களுக்கும், வாக்காளர்களுக்கும் அளித்த இதுபோன்ற நூற்றுக்கணக்கான வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை அ.தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் நாளை (28-ந்தேதி) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் அ.தி.மு.க.வினர் தங்களது வீடுகள் முன்பு பதாகைகளை ஏந்தி தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்ப வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

இதன்படி நாளை அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தனது வீட்டு முன்பு பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்.

சேலம் சந்திப்பு ரெயில் நிலையம் அருகே சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் நாளை காலை 11 மணிக்கு இந்த போராட்டம் நடைபெறுகிறது.

இதில் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட அ.தி.மு.க.வினர் திரளாக பங்கேற்கிறார்கள்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நாளை பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளார். அவர் சென்னை அல்லது தேனியில் போராட்டத்தில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வத்துடன் அ.தி.மு.க. நிர்வாகிகளும் பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தங்கள் வீடுகள் முன்பு திரண்டு தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்புகிறார்கள்.

அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள் தங்களது பகுதிகளில் மாவட்ட நிர்வாகிகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

அ.தி.மு.க. போராட்டம் முதலில் நிர்வாகிகளின் வீடுகளுக்கு முன்பு மட்டுமே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அரசின் கவனத்தை முழுமையாக ஈர்க்கும் வகையில் பொது இடங்களிலும் திரண்டு போராட்டம் நடத்தவும் அ.தி.மு.க.வினர் திட்டமிட்டுள்ளனர். வேளச்சேரியில் பொது வழியில் திரண்டு போராட்டம் நடத்தப்படுகிறது.

வேளச்சேரி குருஞானக் கல்லூரி அருகே சாலையோரமாக மாவட்ட செயலாளர் அசோக் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூடி கோ‌ஷங்களை எழுப்புகிறார்கள்.

தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பதாகைகளையும் கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

அனைத்து மாவட்டங்களிலும் 60 இடங்களுக்கு குறையாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகளிடம் அ.தி.மு.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது.

சென்னையிலும் அனைத்து மாவட்ட செயலாளர்களும் நாளை தொண்டர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். தங்களது பகுதிகளில் வீடுகள் முன்பும், பொது இடங்களிலும் அ.தி.மு.க.வினர் கூட உள்ளனர்.

இதனால் சென்னையில் அதிக இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 500-க்கும் மேற்பட்ட இடங்களில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க. போராட்டத்தையொட்டி சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் நாளை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன. பொது இடங்களில் போராட்டம் நடத்தும் அ.தி.மு.க.வினர் திடீரென சாலை மறியல் உள்பட போராட்டங்களில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு உளவு பிரிவு போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 74 மாவட்டங்களாக அ.தி.மு.க. பிரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து மாவட்ட செயலாளர்களும் நாளை நடைபெற உள்ள போராட்டங்களில் பங்கேற்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றனர். டெல்லி பயணத்தை முடித்து கொண்டு இன்று இருவரும் சென்னை திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.