X

திமுக அரசை கண்டித்து 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தும் பா.ஜ.க

தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டதாக பா.ஜனதா குற்றம்சாட்டி வருகிறது. அரசு அறிவிப்புகளை தேர்தல் வாக்குறுதியை மேற்கோள் காட்டி அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் தி.மு.க. அரசை கண்டித்து வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

வடசென்னை மேற்கு மாவட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார். தென்சென்னையில் கராத்தே தியாகராஜன், சென்னை கிழக்கில் எம்.என்.ராஜா, மத்திய சென்னை கிழக்கில் வினோஜ் பி.செல்வம், மத்திய சென்னை மேற்கில் சக்கரவர்த்தி, சென்னை மேற்கில் கரு.நாகராஜன், வடசென்னை கிழக்கில் ஆர்.சி.பால்கனகராஜ், வேலூரில் முன்னாள் மேயர் கார்த்தி யாயினி, கிருஷ்ணகிரியில் முன்னாள் எம்.பி. நரசிம்மன் ஆகியோர் தலைமையில் நடக்கிறது.

திருச்சி நகரில் நடக்கும் போராட்டத்துக்கு முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். சிவகங்கையில் எச்.ராஜா, தேனியில் மீனாதேவ், கன்னியாகுமரியில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., தூத்துக்குடியில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, நெல்லையில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., கோவையில் சி.பி.ராதா கிருஷ்ணன், வானதி சீனிவாசன், ஈரோடு தெற்கில் டாக்டர் சரஸ்வதி எம்.எல்.ஏ., பாயிண்ட் மணி ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.