X

திமுக அரசை கண்டித்து திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் அரசு நடத்துகின்ற மதுபான கடைகளில் முறைகேடுகள் தொடர்வதாலும், அரசின் அனுமதி இல்லாமல் மாவட்டத்தில் பல இடங்களில் பார்கள் இன்றும் இயங்கிக் கொண்டிருப்பதாலும், இவை சமூக விரோதிகளின் புகலிடங்களாக மாறி, மக்களின் உயிரைப் பறித்துக் கொண்டிருப்பதாலும், திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளும், தொழிலாளர்களும் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளைக் கண்டு கொள்ளாமலும், போதைப் பொருட்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமலும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்காமலும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமலும், மெத்தனப் போக்கோடு இருந்து வரும் தி.மு.க. அரசை கண்டித்தும், மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல், தனது குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்து அ.தி.மு.க. திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் வருகிற 23-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில், பல்லடம், வீரபாண்டி பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையிலும், எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னிலையிலும் நடைபெறும். இதில் நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags: tamil news