திமுக அரசின் வரி உயர்வால் மக்கள் திண்டாடுகிறார்கள் – பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு
மதுரை அ.தி.மு.க. மாநாடு தொடர்பாக திருப்பூர் சிறுபூலுவப்பட்டியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பேற்றவுடன் அவர் அறிவித்த முதல் அறிவிப்பு அ.தி.மு.க. உறுப்பினர்களை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என்பதாகும். அடுத்த மாதம் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு உலக அளவில் வரலாற்று சிறப்புமிக்க கூட்டமாக இருக்க வேண்டும்.
மதுரை மாநாட்டிற்கு பிறகு எந்த அனுபவமும் இல்லாத, அணுகுமுறை தெரியாத தி.மு.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதற்கான இறுதி தேதியை அறிவிக்கின்ற மாநாடாக அமையும். தி.மு.க. ஆட்சியில் கைத்தறி நெசவாளர்கள் மிகுந்த கஷ்டத்திற்குள்ளாகியுள்ளனர்.
பொள்ளாச்சி, ஆரணி உள்பட பல்வேறு ஊர்களில் உள்ள ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைத்தறி நெசவாளர் குடும்ப பெண்கள் தற்போது கட்டிட வேலைக்கு செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விசைத்தறி, பனியன் தொழில்கள் நலிவடைந்துள்ளது.
தி.மு.க. ஆட்சி வந்தாலே திருப்பூர் மக்களுக்கு திண்டாட்டம் தான். தண்ணீர் வரி, வீட்டு வரி, மின்கட்டணம் உயர்வு காரணமாக அடித்தட்டு மக்கள் திண்டாடி வருகின்றனர். இதுதான் விடியா தி.மு.க. அரசின் சாதனைகளாகும். இவ்வாறு அவர் பேசினார்.