X

திமுக அரசின் செயல்பாடுகள் பற்றி அண்ணாமலைக்கு எப்படி தெரிந்தது? – உயர் மட்ட அதிகாரிகள் தரப்பில் விசாரணை

காவல்துறையில்தான் அதிரடி நடவடிக்கை பரபரப்பாக பேசப்படும். குற்றச் சம்பவங்களும் அது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் துப்பு துலக்கி கண்டுபிடித்து உண்மைகளை வெளிக்கொண்டு வருவதும் ஆச்சரியமாக பார்க்கப்படும், பேசப்படும். இதில் எல்லாப்புகழும் சாட்சாத் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கே சொந்தமானது.

ஆனால் அரசியல்துறை முற்றிலும் மாறுபட்டது. சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் பேசுவார்கள். அப்படி பேசுவதிலும் உண்மை எது? பொய் எது? என்று கடைசி வரை கண்டுபிடிக்கவே முடியாமல் போய்விடும். அந்த அளவுக்கு பேசியே குழப்பி விடுவார்கள். சமீப காலமாக அரசியலிலும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் அதிரடி நடவடிக்கைகள் அரசியல் களத்தை அதிர வைக்கின்றன.

ஐ.பி.எஸ்.அதிகாரியாக இருந்ததால் அரசியலிலும் புகுந்து தனது அதிரடி நடவடிக்கைகளால் பேச வைத்துள்ளார். அரசியல் களத்தில் ஆளும் தி.மு.க. அவரது குடைச்சலை பெரும் குடைச்சலாகவே கருதுகிறார்கள். தி.மு.க.வின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க.விடம் இருந்து எதிர்ப்பு வருகிறதோ இல்லையோ அண்ணாமலையிடம் இருந்து உடனுக்கு உடன் வருகிறது. அது உடனடியாக விவாதமாகவும் ஆகி விடுகிறது.
தன்னைப்பற்றி விமர்சிப்பவர்களையும் சும்மா விடுவதில்லை. அவர்களது பின்னணியையும் போலீஸ் போல் தோண்டி துருவி எடுத்து விளாசுகிறார். இதனால் விமர்சிப்பவர்களும் எதிர்தாக்குதல் எப்படி வரும் என்பதை ஒரு முறைக்கு இருமுறை யோசித்தே விமர்சிக்கிறார்கள்.

கடந்த ஒரு மாதமாக 2 துறைகள் மீது ஊழல் புகார் வெளியிட போவதாக கூறி வந்தார். எல்லோரது ஹேஸ்யமும் ஒரு பக்கத்தில் இருக்க அவர் வெளியிட்டது யாரும் எதிர்பாராதது. கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குவதில் மிகப்பெரிய முறைகேடு நடக்கிறது.

குறைந்த விலைக்கு ஆவின் நிறுவனத்தில் தயாரிக்க முடிவு செய்த பிறகு அந்த முடிவு மாற்றப்பட்டுள்ளது. கூடுதல் விலைக்கு தனியார் நிறுவனத்துக்கு வழங்க முடிவு செய்துள்ளார்கள் என்பதை சம்பந்தப்பட்ட துறையில் எந்தெந்த தேதிகளில் ஆலோசித்தார்கள். அதில் யார் யார் கலந்து கொண்டார்கள். என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதை நகல் காப்பி ஆதாரத்துடன் தெரிவித்து ஆச்சரியப்பட வைத்தார்.

இந்த விவகாரத்தில் டெண்டர் இன்னும் உறுதி செய்யாத நிலையில் முறைகேடுக்கு ஏது வாய்ப்பு என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதையும் அண்ணாமலை விடவில்லை. சம்பந்தப்பட்ட நிறுவனம் பொங்கல் தொகுப்பு வழங்கியதிலேயே முறைகேடு செய்த நிறுவனம். அந்த நிறுவனம் கருப்பு பட்டியலில் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட நிறுவனம் டென்டரில் கலந்து கொள்ள எப்படி அனுமதிக்கப்பட்டது என்று எதிர் கேள்வியை முன் வைத்தார்.

ஆவின் ஊட்டசத்து மாவு கர்ப்பிணிகளுக்கு ஏற்றதல்ல என்று கூறிய நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ஆவினில் இந்த கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பொருளை தயாரிக்க கேட்டுக் கொண்டுள்ளார்கள். அது பற்றி ஆய்வு நடக்கிறது. ஆய்வு முடிந்து தயாரித்து கொடுத்தால் கொள்முதல் செய்யலாம் என்று விவாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

ஒரு அரசு நிறுவனத்தால் ஊட்டச்சத்து மாவு தயார் செய்வது இயலாத காரியம் அல்ல. அதுமட்டுமல்ல இதுபற்றி விவாதிக்கப்பட்டு இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டது. அடுத்ததாக அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டு நில அங்கீகாரம் தொடர்பானது. ஒரு இடத்தை வங்கி அங்கீகாரம் பெற விண்ணப்பிப்பது, முதல் இடத்தை பார்வையிடுதல், சாலை அமைத்தல், அதை பார்வையிட்டு சான்றிதழ் அளித்தல் என்று ஒவ்வொரு கட்டத்துக்கும் எத்தனை நாள் அரசு அவகாசம் வழங்கி இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி குறைந்தபட்சம் 200 நாட்கள் ஆகும் நிலையில் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு 8 முதல் 20 நாட்களில் பல இடங்களில் அங்கீகாரம் வழங்கப்பட்டு இருப்பதையும் ஆதாரத்துடன் வெளியிட்டார்.

இதற்கும் எல்லா ஆவணங்களும் சரியாக இருந்ததால் அங்கீகாரம் கிடைப்பதில் தாதமாகாது என்று பொத்தம் பொதுவாகவே விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் பெரு நகர வளர்ச்சி குழுமத்தில் அதன் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து அங்கீகாரம் வாங்குவது எளிதானது அல்ல என்பதை ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் ஒத்துக்கொள்கிறார்கள். இவை எல்லாவற்றிற்கும் காரணம் ஒரு ஆடிட்டர், ஒரு எம்.எல்.ஏ. மகன் என்பதை அவர்களது பெயர் விபரங்களையும் வெளியிட்டு ஒவ்வொரு துறையிலும் தலையிட்டு அதிகாரிகளை நெருக்கடி கொடுத்து செய்கிறார்கள் என்றார்.

பெருநகர வளர்ச்சி குழுமத்தில் இல்லாத ஒரு பதவி உருவாக்கப்பட்டு அதில் ஒரு அதிகாரியை நியமித்து சாதிக்கிறார்கள் என்றும் கூறினார். தனி நபர்களை பற்றியும், துறைகளில் நடந்துள்ள விவகாரங்கள் பற்றியும் விலாவாரியாக புகார் கூறி இருக்கிறார்கள். வழக்குகள் போட்டாலும் சந்திக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

இந்த அளவுக்கு துறை ரீதியாக நடக்கும் அசைவுகள், தலையீடுகள் எல்லா விபரங்களும் அண்ணாமலையின் கைகளுக்கு அவ்வளவு எளிதில் எப்படி கிடைக்கிறது? இதுபற்றிய ரகசிய விசாரணையும், கண்காணிப்பும் தொடங்கி உள்ளது.

இதுபற்றி அண்ணாமலையிடம், “நீங்கள் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்ததால் உயர் அதிகாரிகள் சிலர் உங்களுக்கு சாதகமாக செயல்படுகிறார்களா?” என்று நிருபர்கள் நேரடியாகவே கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், “நேர்மையாக பணியாற்ற ஆசைப்படும் பலர் நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். அந்த நெருக்கடியை தவிர்க்க அவர்களே வெளியே சொல்லி விடுகிறார்கள்” என்றார்.

இந்த பதில் சாதாரணமானது. துறை ரீதியாக நடக்கும் செயல்பாடுகள் கை மாறுவது சாதாரண விசயமல்ல என்பது தெரிந்ததே. அடுத்ததாக இன்னும் சில துறைகளை பற்றிய ஆதாரங்களை திரட்டி வருவதாகவும், அது இப்போது வெளியிட்டதை விட 10 மடங்கு பெரிதாக இருக்கும் என்றும் காற்று வாக்கில் பேசி சென்றுள்ளார். அது மேலும் பலரது வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

அரசியல் ரீதியாக குற்றச்சாட்டுகளை சமாளித்தாலும் தேவையற்ற சந்தேகங்களுக்கு இடமளிப்பதால் தகவல்கள் வெளியே கசிவதை தடுக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். ஒவ்வொரு துறையிலும் ரகசியங்கள் காக்கப்பட வேண்டும். அரசு ஆவணங்கள் காக்கப்பட வேண்டும். விழிப்புடனும், கண்காணிப்புடனும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தேக அதிகாரிகளை கண்காணித்து வரும்படியும் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனால் அரசு துறைகள் உஷாராக உள்ளன.