திமுகவோடு சேர்ந்து அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் – தங்க தமிழ்ச்செல்வன்
தேனி மாவட்டம் க.விலக்கு பகுதியில் அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் வருகிற 23-ந் தேதிக்கு பிறகு ஆட்சி மாற்றம் நடைபெறும். 22 சட்ட பேரவை இடைத்தேர்தலில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும்.
ஆண்டிப்பட்டி அ.ம.மு.க. அலுவலகத்தில் 1.48 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு சூழ்ச்சி செய்து ஜோடிக்கப்பட்டது. அதில் வக்கீல் செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ஜாமீனில் வெளியே எடுத்து சட்ட ரீதியாக வழக்கை சந்திப்போம்.
அ.ம.மு.க., தி.மு.க.வின் பி டீம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார். அப்படி நாங்கள் பி டீம் என்றால் நாங்கள் ஏன் தேர்தலில் தனித்து நிற்க போகிறோம். தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலில் நின்றிருக்க மாட்டோமா? தற்போது நடக்கும் அ.தி.மு.க. ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர 35 எம்.எல்.ஏ.க்கள் தேவை.
இந்த தேர்தலில் 22 தொகுதிகளில் வெற்றி பெற்று தி.மு.க.வோடு சேர்ந்து அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்ப்போம். தி.மு.க.வுடன் சேர்ந்து தற்போது நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க அனைத்து நடவடிக்கையையும் மேற்கொள்வோம். எனவே இதற்கு தி.மு.க. எங்களுக்கு ஆதரவு தர வேண்டும். ஆனால் அதே வேளையில் தி.மு.க. ஆட்சி அமைக்க நாங்கள் ஆதரவு தர மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.