திமுகவின் வீழ்ச்சிக்கு இந்தி எதிர்ப்பே காரணமாக போகிறது – அண்ணாமலை அறிக்கை

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சட்டமன்றத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தால் ஒன்றும் ஆகப்போவது இல்லை. தீர்மானம் மட்டும் போடத்தான் இந்த ஆட்சியா? தமிழக அரசின் இருமொழி கொள்கை என்பது என்ன? ஆங்கிலம் கட்டாயம், ஆனால் தமிழ் கட்டாயம் இல்லை என்பதுதானே? அதனால்தான் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை என்ற பெயரில் 1-ம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை தமிழே படிக்காமல், படிக்கக்கூடிய வாய்ப்பை உருவாக்கி இருக்கிறீர்கள். இது தமிழ்மொழிக்கு செய்யும் துரோகம் இல்லையா?

தமிழக அரசு செலவில் தமிழ்மொழியை படிக்காமலேயே, கல்லூரி வரை படிக்க வசதியாக, அரசு செலவில் இயங்கும் அரசு பள்ளிகள் பட்டியல் உண்மையா? இல்லையா? பயிற்றுமொழியாக உருது மொழியில் 56 பள்ளிகள், மலையாள பள்ளிகள் 50, தெலுங்கு பள்ளிகள் 35, கன்னட பள்ளி 1, இதுதவிர பாடமொழியாக உருது மொழியில் 204 பள்ளிகள், மலையாள மொழியில் 50 பள்ளிகள், தெலுங்கு மொழியில் 234 பள்ளிகள், கன்னட மொழியில் 60 பள்ளிகள் அரசு செலவில் இயங்குகின்றன. தமிழ்மொழியை நீக்கிவிட்டு பிற மொழிகளை சொல்லித்தரும் அரசு இந்தியை மட்டும், விருப்பம் உள்ளவர்கள் படிக்க அனுமதி மறுப்பது ஏன்? கல்வியில் ஏன் அரசியல் செய்கிறீர்கள்?

50 ஆண்டுகளுக்கும் மேலாக 1962 முதல் இருக்கும் தி.மு.க., தமிழை வளர்க்க என்ன செய்திருக்கிறது? தமிழர்கள் முன்னேற்றம் என்று சொல்ல மனமில்லாமல் திராவிட முன்னேற்றம் என்று கூறும் தி.மு.க.வா தமிழர்களை முன்னேற்றப்போகிறது? ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தமிழின் பெருமையை உயர்த்திப் பிடிக்கிறார். தமிழுக்கு எதுவுமே செய்யாமல் தமிழுக்காக போராட்டம் என்ற பொய்ப் பிரசாரத்தை இன்னும் எத்தனை நாள் தி.மு.க. சொல்லிக்கொண்டு இருக்கும்? இந்தி எதிர்ப்பு போர் தி.மு.க.வை 1967-ல் அரியணை ஏற்றியது. இப்போது காலம் மாறிவிட்டது. அதே இந்தி எதிர்ப்புதான் தி.மு.க.வின் வீழ்ச்சிக்கும் காரணமாகப்போகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools