திமுகவின் சட்ட நடவடிக்கையை சந்திக்க தயார் – அண்ணாமலை அறிவிப்பு

தி.மு.க.வை சேர்ந்த 12 நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி அவர்களின் சொத்துபட்டியலை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ”குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை 15 நாட்களுக்குள் அவர் எங்களிடம் வழங்கவில்லை என்றால், அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

இந்த நிலையில் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் எம்.பி. அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். தி.மு.க. மற்றும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பாக நான் கூறிக்கொள்வது என்னவென்றால், உங்கள் பேச்சு, குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உங்கள் சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் இணையதளத்தில் வீடியோவை நீக்க வேண்டும்.

நஷ்ட ஈடாக ரூ.500 கோடி எங்கள் கட்சிக்காரருக்கு வழங்க வேண்டும். எங்கள் கட்சிக்காரர் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதை செலுத்த விரும்புகிறார். இந்த அறிவிப்பு கிடைத்து 48 மணி நேரத்துக்குள் இவற்றை செய்ய தவறினால், உங்களுக்கு எதிராக பொருத்தமான சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடங்குவதற்கு எங்கள் கட்சிக்காரர் முன்வருவார்.

இவ்வாறு அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தி.மு.க.வினரின் சொத்து பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் சட்ட நடவடிக்கையை சந்திக்க தயார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools