Tamilசெய்திகள்

தினமும் 15 ஆயிரம் கவச உடைகள் வழங்கப்படுகிறது – நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

கொரோனா வைரஸ் தொற்று உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும், மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்டோருக்கு தினமும் 15 ஆயிரம் பி.பி.இ. முழு உடல் கவச உடைகள் வழங்கப்படுவதாக ஐகோர்ட்டில் தமிழக சுகாதாரத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஜிம்ராஜ் மில்டன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு டாக்டர்கள், நர்சுகள் சிகிச்சை அளிக்கின்றனர். நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை மருத்துவத்துறையை சேர்ந்த ஊழியர்கள் செய்கின்றனர். மேலும் இந்த வைரசுக்கு எதிரான பணியில், தூய்மை பணியாளர்கள், போலீஸ்காரர்கள் உள்ளிட்டோர் முக்கிய பங்காற்றுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் தொற்று ஏற்படாமல் தடுக்க தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் முதன்மை நிலையில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ ஆய்வக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்களை வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ள பி.பி.இ. முழு உடல் கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளன’ என்று கூறியிருந்தார்.

மேலும் அந்த அறிக்கையில், ‘டாக்டர்கள் உள்ளிட்டோர் கைகளை சுத்தமாக வைப்பதற்கு தேவையான கிருமிநாசினி, சோப், கையுறை உள்ளிட்டவைகள் வழங்கப்படுகின்றன. இந்த பொருட்கள் எதுவும் பற்றாக்குறை இல்லாமல், தாராளமான எண்ணிக்கையில் உள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும், தினந்தோறும் 15 ஆயிரம் பி.பி.இ. முழு உடல் கவச உடைகள் வழங்கப்படுகின்றன. மருத்துவ பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் ‘ஷிப்ட்’ அடிப்படையில் 6 மணி நேரம் மட்டுமே பணி வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல, தமிழக காவல்துறையில் 7 ஆயிரத்து 850 பேருக்கு முக கவசம், கையுறை வழங்குவதற்கு ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா வார்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாருக்கும் முழு உடல் கவச உடை மற்றும் என் 95 முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கையுறை, ஷூக்களுடன், முழு உடல் கவசமும் வழங்கப்பட்டுள்ளன’ என்று கூறப்பட்டு இருந்தது.

அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கைக்கு மறுப்பு அறிக்கை மனுதாரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளுக்கு, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்படி 3 அடுக்கு பாதுகாப்பு உடை வழங்கப்படவில்லை. அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் சாதாரண மேலாடை மட்டுமே வழங்கப்படுகிறது.

தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், இதுகுறித்த சரியான தகவல்கள் இல்லை’ என்று கூறியிருந்தார்.

மனுதாரர் தரப்பில் கூறப்படும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க ஒரு வாரம் கால அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *