சேலம் சூரமங்கலம் பகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பழைய சூரமங்கலத்தில் நடந்தது.
கூட்டத்தில் கர்நாடக மாநில முன்னாள் செயலாளர் ஓ. புகழேந்தி பேசியதாவது:-
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க. இருக்குமா? இந்த ஆட்சி நீடிக்குமா? என்று சிலர் நினைத்தார்கள். ஆனால் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யார் பொறுப்புக்கு வந்திருந்தாலும் இந்த ஆட்சி நீடித்திருக்க முடியாது.
அவரது நிர்வாக திறமையால் மட்டுமே கட்சியும், ஆட்சியும் வீறுநடை போட்டு வருகிறது. 97 எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த ஆட்சியை கலைத்து விட வேண்டுமென்று திட்டம் போட்டார். ஆனால் முதல்-அமைச்சரின் சாமர்த்தியத்தால் எதுவும் நடக்கவில்லை.
உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி அடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலிலும் பொதுமக்கள் அனைவரும் அ.தி.மு.க.வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். டி.டி.வி.தினகரனின் கூடாரம் காலி ஆகி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.