திட்டமிட்டே எங்களது சின்னத்தை மங்களாக்கியுள்ளார்கள் – சீமான்

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுபா‌ஷினியை ஆதரித்து மயிலாடுதுறையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி, மருத்துவத்தை தனியாருக்கு தாரை வார்த்து விட்டனர். மீத்தேன் திட்டத்தை தடுப்போம் என்கின்றனர்.

இத்திட்டம் கொண்டு வரப்பட்டது யாருடைய ஆட்சி காலத்தில்? கச்சத்தீவை மீட்போம் என்கின்றனர். கச்சத்தீவு பறிபோனது யாருடைய ஆட்சி காலத்தில்? கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வருவோம் என்கின்றனர். அது யாருடைய ஆட்சி காலத்தில் மத்திய பட்டியலுக்கு சென்றது? விவசாயக்கடன், கல்விக் கடனை தள்ளுபடி செய்வோம் என்கின்றனர். விவசாயிகளையும், மாணவர்களையும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளியது யார்? என்பதனை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நரேந்திரமோடி ஆறுதலாக ஒரு ‘ட்வீட்‘ கூட போடவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் செய்யாத எதனை, அடுத்த 5 ஆண்டுகளில் நரேந்திரமோடி செய்யப்போகிறார்?.

வாக்குப்பதிவு எந்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் சின்னமான விவசாயி சின்னத்தை திட்டமிட்டே மங்கலாக பதித்துள்ளனர். இதனால் நாங்கள் பொதுமக்களிடம் வாக்கு கேட்கும்போது, வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த சின்னம் மங்கலாக தெரிகிறதோ அந்த சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கேட்க வேண்டிய நிலையில் உள்ளோம். மக்கள் இந்த தேர்தலை மாற்றத்துக்கான தேர்தலாக பாருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news