Tamilசெய்திகள்

திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது

காங்கிரஸ் ஆட்சியின் போது, கடந்த 2007-ம் ஆண்டு, “ஐ.என்.எக்ஸ். மீடியா” என்ற நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி பெற அனுமதி வழங்கப்பட்டது.

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் இந்த அனுமதியை வழங்கியது.

இந்த அனுமதி வழங்கப்பட்ட போது, மத்திய நிதி மந்திரியாக இருந்தவர் ப.சிதம்பரம். அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் கமிஷன் பணம் பெற்றுக்கொண்டு, அந்த நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்ட உதவியதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இது பற்றி சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.

அப்போது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் தலைவர் இந்திராணி சி.பி.ஐ.யிடம் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவர் மீதும் புகார்கள் தெரிவித்து வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில் முதலில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.

அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் 2 தடவை காவலில் எடுத்து விசாரித்தனர். அதன்பிறகு ப.சிதம்பரம் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவர் தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதனால் ப.சிதம்பரம் தொடர்ந்து திகார் ஜெயிலில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த 2 மாதமாக அவர் திகார் ஜெயிலில் இருக்கிறார்.

நாளை (17-ந்தேதி) ப.சிதம்பரத்தின் கோர்ட்டு காவல் முடிகிறது. இதனால் மீண்டும் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட இருக்கும் அவர் விரைவில் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

இந்த நிலையில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் முறைகேடான பணப்பரிமாற்றம் குறித்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அனுமதிக்க கோரி, டெல்லி சிறப்பு கோர்ட்டில் மனு செய்தது. அமலாக்கத்துறை விசாரணைக்காக தன்னை கைது செய்யக்கூடாது என்று ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி செய்து விட்ட நிலையில், சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பு பரபரப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தலாம் என்று நேற்று டெல்லி சிறப்பு கோர்ட்டு அறிவித்தது. தேவைப்பட்டால் சிதம்பரத்தை கைது செய்யலாம் என்றும் கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதற்கான வசதிகளை திகார் ஜெயில் அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து டெல்லி திகார் ஜெயிலுக்கு இன்று (புதன்கிழமை) காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு ஒன்று சென்றது. சிறப்புக் கோர்ட்டு உத்தரவுப்படி 3 அமலாக்கத்துறை அதிகாரிகள் மட்டும் திகார் ஜெயிலுக்குள் சென்றனர்.

அங்கு அவர்கள் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்திடம் அதிரடி விசாரணை நடத்தினார்கள். அப்போது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி பெற கை மாறிய கமிஷன் பணப்பரிமாற்றம் பற்றி ப.சிதம்பரத்திடம் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டன.

பணப்பரிமாற்றம் குறித்து இந்திராணி முகர்ஜி கொடுத்துள்ள வாக்குமூலம் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக கொண்டும் அதிகாரிகள் கேள்வி எழுப்பினார்கள். இதில் பெரும்பாலான கேள்விகளுக்கு ப.சிதம்பரம் நேரடி பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ப.சிதம்பரத்திடம் இன்று நடத்தப்பட்ட விசாரணை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. சுமார் 2 மணி நேரம் விசாரணைக்குப் பிறகு ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

ப.சிதம்பரத்தை கைது செய்ததும், அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும், அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர். எனவே ப.சிதம்பரத்தை 14 நாட்கள் காவலில் தங்களிடம் ஒப்படை அனுமதி கோரி, டெல்லி சிறப்புக் கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் மனு செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

அதை ஏற்று அமலாக்கத்துறையினரிடம் ப.சிதம்பரம் ஒப்படைக்கப்படுவார். இத்தகைய சட்ட நடைமுறைகளால் ப.சிதம்பரம் இந்த வழக்கின் பிடியில் இருந்து எப்போது விடுபடுவார் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *