தாளவாடி ஓசூர் மலை கிராமத்தில் ஹீமோகுளோபினோபதி திட்டம் விரிவாக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
ஈரோடு மாவட்டம் தாளவாடி ஓசூர் மலை கிராமத்தில் ஹீமோகுளோபினோபதி திட்ட விரிவாக்கம் முகாம் மற்றும் இருவாரகால தீவிரமான வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துதல் திட்டம் தொடக்க விழா இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஹீமோகுளோபினோபதி திட்ட விரிவாக்க முகாமை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதில் கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொது மக்களுக்கு மருத்துவ நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தாளவாடியில் நேரடி கள ஆய்வு தொழுநோய் கண்டுபிடிப்பு பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்களின் வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டது.
மேலும் தொழுநோயில் இருந்து குணமடைந்த 40 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட ஊன தடுப்பு சிகிச்சை முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு சுய பாதுகாப்பு முதல் உதவி சிகிச்சை பெட்டகம், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ஆணை, மறு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நபர்களுக்கு அரசு உதவித்தொகை காசோலை, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பொதுமக்கள் கலந்து கொண்ட தோல் சிகிச்சை முகாம், பள்ளி மாணவர்களுக்கான தொழுநோய் பரிசோதனை முகாமை பார்வையிட்டார். இதேபோல் தொழுநோய் விழிப்புணர்வு கண்காட்சி, பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகியவற்றையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் குருநாதன், மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை (தொழுநோய் பொறுப்பு) கூடுதல் இயக்குனர் அமுதா, தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி என்.சிவகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி, ஈரோடு நலப்பணிகள் (பொறுப்பு) இணை இயக்குனர் பிரேமகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.