X

தாலி கட்டும் நேரத்தில் மணமகன் கையில் இருந்த தாலியை தட்டிவிட்டு மணமகள் கழுத்தில் தாலி கட்ட முயன்ற காதலன்!

தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். என்ஜினீயர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரேவதிக்கும் கடந்த 4 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்ய பெற்றோர் நிச்சயம் செய்தனர். இன்று அவர்களது திருமணம் தண்டயார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே உள்ள முருகன் கோவிலில் உள்ள மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்து இருந்தனர்.

முன்னதாக நேற்று இரவு மணமக்கள் வரவேற்பும் சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை 6.30 மணிக்கு மேல் திருமண சடங்குகள் முடிந்து மணமேடையில் மணமகன் மணிகண்டனும், மணமகள் ரேவதியும் அமர்ந்து இருந்தனர். வேதமந்திரங்கள் முழங்க மணமகன் மணிகண்டன் தாலியை எடுத்து மணமகள் ரேவதியின் கழுத்தில் கட்ட தயார் ஆனார்.

அந்த நேரத்தில் அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென மணமகன் மணிகண்டன் கையில் வைத்திருந்த தாலியை தட்டி விட்டார். இதில் தாலி கீழே தரையில் விழுந்தது. இதனால் மணமகன் மணிகண்டன் அதிர்ச்சி அடந்தார். அப்போது எதிர்பாராமல் நடந்து விட்டதாக கூறிய அந்த வாலிபர் தாலியை எடுத்து மணிகண்டனிடம் கொடுப்பது போல் நடித்து மணமகள் ரேவதியின் கழுத்தில் கட்ட முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மணமகனும், அருகில் இருந்த உறவினர்களும் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தாலி கட்டும் முயற்சியை தடுத்தனர். அவனிடம் இருந்த தாலியையும் பறித்தனர்.

உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவனை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போதுதான் அவர் மணமகள் ரேவதியை காதலித்து வந்தது தெரிந்து திருமண வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் அவர் தண்டையார்பேட்டை கைலாசம் தெருவைச் சேர்ந்த சதீஷ் என்பது தெரிந்தது.

இதைத் தொடர்ந்து திருமணம் நின்று போனது. இதனால் மணமக்களை வாழ்த்த வந்த உறவினர்கள் சோகத்துடன் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறினர். சதீசும், ரேவதியும் ராயபுரத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் இடையே காதல் ஏற்பட்டது.

இதற்கிடையே ரேவதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது பற்றி அறிந்ததும் சதீஷ் கவலை அடைந்தார். அவர் எப்படியாவது திருமண நேரத்தில் கடைசியில் புகுந்து ரேவதியின் கழுத்தில் தாலி கட்டி விட வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார். அதன்படி சதீஷ் நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருந்தே திருமண மண்டப தில் சுற்றி வந்துள்ளார்.

மணமகள் ரேவதியின் நண்பர் என்று கூறியதால் அவர் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்திய சதீஷ் மணமேடை வரை அருகே வந்து நின்றார். தாலி கட்டும் நேரத்தில் மணமகன் கையில் இருந்த தாலியை தட்டி விட்டு அதனை காதலியின் கழுத்தில் கட்ட முயன்று கடைசியில் தோல்வி அடைந்தார்.

திருமணம் நின்றதால் இரு வீட்டாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இரு தரப்பினரும் சரமாரியாக குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் திருமண மண்டபம் களை இழந்து சோகமயமாக காணப்பட்டது. இது தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இருவீட்டாரையும் மற்றும் மணமகள், மணமகன், காதலன் ஆகிய 3 பேரையும் வரவழைத்து விசாரித்தனர். 3 பேரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் கூறி வருவதால் இதில் எந்த முடிவும் எடுக்க முடியாமல் போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.

3 பேரின் எதிர்காலமும் பாதிக்காத வகையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. திருமணம் நிச்சயம் செய்த நாள் முதல் ரேவதி தனது காதலன் குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்தார். அவர் எப்போதும் போல் மணமகன் மணிகண்டனிடம் பேசி இருக்கிறார். இதனால் யாருக்கும் அவர் மீது சந்தேகம் ஏற்படவில்லை. திருமண வரவேற்பின்போது சதீஷ் மணமக்கள் அருகில் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.