தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் இன்று (புதன்கிழமை) முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற வேண்டும் என்றால் ஏப்ரல் 26-ந் தேதிக்குள் தரவரிசையில் ‘டாப்-16’ இடங்களுக்குள் பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் இருக்க வேண்டியது அவசியமானதாகும். ஏப்ரல் மாதம் இறுதிக்குள் தாய்லாந்து மாஸ்டர்ஸ் உள்பட 8 போட்டிகள் அரங்கேற இருக்கின்றன. எனவே வருகிற போட்டிகள் அனைத்தும் ஒவ்வொரு வீரர்-வீராங்கனைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
தற்போது, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் உலக சாம்பியன் பி.வி.சிந்து (தரவரிசையில் 6-வது இடம்), சாய் பிரனீத் (11-வது இடம்) ஆகியோர் மட்டுமே ஏறக்குறைய இடத்தை உறுதி செய்துள்ளனர்.
ஒலிம்பிக் தரவரிசையில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற நோக்கில் சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட இந்திய வீரர்-வீராங்கனைகள் பிரிமீயர் பேட்மிண்டன் லீக் போட்டியை தவிர்த்து தாய்லாந்து மாஸ்டர்ஸ் போட்டியில் பங்கேற்கிறார்கள்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், டென்மார்க் வீராங்கனை லின் ஹோஜ்மார்க்கை சந்திக்கிறார். லின்னுடன் ஏற்கனவே மோதிய 4 ஆட்டங்களிலும் சாய்னா வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் சொதப்பிய சாய்னா, இந்த ஆண்டில் நடந்த மலேசியா மாஸ்டர்ஸ் போட்டியில் கால்இறுதி வரை முன்னேறினார். ஒலிம்பிக் வாய்ப்புக்கான தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள சாய்னா எஞ்சிய போட்டிகளில் சாதித்து தகுதி பெறுவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்களில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், ஷிசர் ஹிரெனையும் (இந்தோனேஷியா), சமீர் வர்மா, லீ ஜி ஜியாவையும் (மலேசியா), பிரனாய், லிவ் டாரெனையும் (மலேசியா) எதிர்கொள்கின்றனர். ஒலிம்பிக் தரவரிசையில் 23-வது இடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்த் கடந்த ஆண்டில் மட்டுமின்றி இந்த ஆண்டு தொடக்கத்திலும் சோபிக்கவில்லை. வரும் போட்டிகளில் அவர் எழுச்சி பெறாவிட்டால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது கடினமாகி விடும்.