X

தாய்லாந்து பேட்மிண்டன் போட்டிக்கான இந்திய வீரர்கள் அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு பெரும்பாலான சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. சில போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டன. இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் தொடங்குகின்றன. யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் போட்டி ஜனவரி 12-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையும், டயோட்டா தாய்லாந்து ஓபன் போட்டி ஜனவரி 19-ந் தேதி முதல் 24-ந் தேதி வரையும் நடக்கிறது.

உலக டூர் இறுதி சுற்று போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஜனவரி 27-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதை கருத்தில் கொண்டு இந்த 3 சர்வதேச போட்டிகளிலும் கலந்து கொள்ளும் 8 இந்திய வீரர்-வீராங்கனைகள் பட்டியலை இந்திய பேட்மிண்டன் சங்கம் நேற்று அறிவித்தது.

இந்த பட்டியலில் முன்னணி வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால், அஸ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி, வீரர்கள் சாய் பிரனீத், ஸ்ரீகாந்த், சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ரெட்டி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் ஸ்ரீகாந்த் மட்டும் அக்டோபர் மாதம் நடந்த டென்மார்க் ஓபன் போட்டியில் கலந்து கொண்டார். மற்ற அனைவரும் மார்ச் மாதத்துக்கு பிறகு பங்கேற்க இருக்கும் முதல் போட்டி இதுவாகும்.