தாய்லாந்து பேட்மிண்டன் இன்று தொடங்குகிறது

கொரோனா பரவலால் கடந்த ஆண்டு பெரும்பாலான பேட்மிண்டன் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. இந்த ஆண்டுக்கான புதிய சீசன் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி தாய்லாந்து போட்டிகளுடன் தொடங்கியுள்ளது. இதில் கடந்த வாரம் நடந்த யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் யாரும் 2-வது சுற்றை தாண்டவில்லை. அடுத்ததாக மொத்தம் ரூ.7 கோடியே 32 லட்சம் பரிசுத்தொகைக்கான டோயோட்டா தாய்லாந்து ஓபன் போட்டி அதே பாங்காக் நகரில் இன்று தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. முந்தைய தோல்வியை மறந்து இந்திய வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் வாகை சூடுவார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் உலக சாம்பியன் பி.வி.சிந்து தனது முதலாவது சுற்றில் தாய்லாந்து வீராங்கனை புசனனை சந்திக்கிறார்.

கடந்த போட்டியில் கொரோனா பரிசோதனை குழப்பத்தில் சிக்கி 2-வது சுற்றுடன் வெளியேறிய மற்றொரு இந்திய நட்சத்திரம் சாய்னா நேவால், உள்ளூர் மங்கையும், முன்னாள் உலக சாம்பியனுமான ராட்சனோக் இன்டானோனை எதிர்கொள்கிறார். இவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்த 17 ஆட்டங்களில் 12-ல் சாய்னா வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும் தற்போது தரவரிசையில் சாய்னாவை விட 15 இடங்கள் அதிகமாக 5-வது இடத்தில் ராட்சனோக் இருப்பதால் கடும் சவால் அளிப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆண்கள் ஒற்றையரில் ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், பிரனாய் காஷ்யப், சவுரப் வர்மா, சமீர் வர்மா ஆகிய இந்திய வீரர்கள் களம் காணுகிறார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools