தாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பெங்களூருவில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நிருபர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாம் எப்போதும் தாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதனால் பாராளுமன்ற கூட்டத்தில் தாய்மொழியில் பேச நான் அனுமதிக்கிறேன். மத்திய அரசு தற்போது என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் தாய்மொழி வழி கல்வியை அறிமுகம் செய்துள்ளது. இது நல்ல விஷயம். இதனால் தாய்மொழி வளரும். நான் எங்கு சென்றாலும் தாய்மொழியில் பேச வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறேன்.

நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் சில எம்.பி.க்கள் கலாட்டா செய்து சபையை நடக்கவிடாமல் செய்தனர்.

அது மட்டுமின்றி மத்திய மந்திரிகள் கைகளில் வைத்திருந்த ஆவணங்களை பறித்து கிழித்து எறிந்தனர். சபை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா நடத்தினர். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சில உறுப்பினர்கள் தரம் தாழ்ந்து செயல்பட்டனர். அதனால்தான் அன்றைய தினம் மிக வேதனை அடைந்தேன். அவ்வாறு ஒழுங்கீனமாக நடந்து கொண்ட உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறேன்.

மேகதாது, காவிரி பிரச்சினை உள்பட எத்தனையோ மக்கள் பிரச்சினைகள் உள்ளன. அதுகுறித்து சபையில் பேச வேண்டும். அதற்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools