Tamilசெய்திகள்

தாம்பரம், போரூர், சூரப்பட்டு ஆகிய பகுதிகளில் பயணிகளை இறக்கி விட ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி

சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பஸ் நிலையத்தில் இருந்துதான், தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் ஆம்னி பஸ்களும் இயக்கப்பட வேண்டும் என கடந்த ஜனவரி 24-ந்தேதி போக்குவரத்துத்துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்கள், சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு நேற்று வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ‘தாம்பரம், போரூர், சூரப்பட்டு ஆகிய இடங்களில் பயணிகளை பயணிகளை இறக்கி விடுவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றார்.

ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் விஜய் நாராயண், ”அனைத்து ஆம்னி பஸ் நிறுவனங்களுக்கும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் வாகன நிறுத்தும் இடம் உள்ளன. எனவே கோயம்பேட்டில் இருந்தும் பயணிகளை ஏற்றிக்கொள்ள அனுமதிக்க வேண்டும், என்றார்.

அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் குறுக்கிட்டு, ”ஆம்னி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்படும் இடங்களில் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும்” என்றார்.

இதையடுத்து நீதிபதி, ”சென்னையில் அனைத்து இடங்களிலும் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதி வழங்கினால் கிளாம்பாக்கம் செல்லும் முன்பாகவே பஸ்கள் நிரம்பி விடும். கிளாம்பாக்கம் பஸ் நிலையம் தொடங்கப்பட்டதன் நோக்கமே வீணாகி விடும். எனவே எந்தெந்த வழித்தடங்களில் பயணிகளை ஏற்றி இறக்க ஆம்னி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்தும், மாற்று வழித்தடங்களை அடையாளம் கண்டும் வரைபடங்களுடன் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை நாளை (வெள்ளிக்கிழமை) தள்ளிவைக்கிறேன் என்று உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.,) உறுப்பினர் செயலாளர் அன்சூல் மிஸ்ரா சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

கிளாம்பாக்கம் பஸ் நிலையமே, பயணிகளுக்கு அதிக வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு 2013-ம் ஆண்டு சட்டசபையில் வெளியிடப்பட்டன. முன்பு சென்னை அருகே பிராட்வே பகுதியில் இருந்துதான் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டன. போக்குவரத்து நெரிசல் காரணமாக கோயம்பேடுக்கு பஸ்நிலையம் மாற்றப்பட்டபோது, இதுபோலத்தான் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தற்போது மக்கள்தொகை பெருக்கம், போக்குவரத்து நெரிசல் காரணமாக தென்மாவட்டங்கள் செல்லும் பஸ்கள் எல்லாம் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பஸ்நிலையத்துக்கு செல்ல பயணிகள் அவதிப்படக்கூடாது என்பதற்காக கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் பஸ்நிலையத்துக்கு 17 ரூபாய் என்ற குறைந்த கட்டணத்தில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை மாநகருக்குள் பல்வேறு பகுதிகளுக்கு 698 பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 4,651 நடைகள் (டிரிப்கள்) அடிக்கப்படுகின்றன. இதுபோக வண்டலூர் ரெயில் நிலையத்துக்கு 2 ‘ஸ்மால்’ பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே, மனுதாரர்களின் கோரிக்கையின் அடிப்படையில், ஆம்னி பஸ்களை கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் இருந்து இயக்க அனுமதித்ததால், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் உருவாக்கியதற்கான நோக்கமே அடிப்பட்டு விடும்.

மனுதாரர்கள் தங்கள் நலனுக்காகத்தான் பார்க்கின்றனரே தவிர, பொதுமக்கள் மற்றும் அரசின் நலனை கருத்தில் கொள்ளவில்லை. இதுபோன்ற வழக்குகளை தொடர்ந்து, தென்மாவட்ட பஸ்கள் எங்கிருந்து புறப்படுகிறது என்ற தேவையற்ற குழப்பத்தை பயணிகள் மத்தியில் உருவாக்குகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.