தாமஸ் மற்றும் உபேர் பேட்மிண்டன் தொடரில் இருந்து பி.வி.சிந்து விலகல்
தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நாளை தொடங்க உள்ள நிலையில், இப்போட்டியில் இருந்து நடப்பு உலக சாம்பியன் பி.வி.சிந்து விலகி உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இப்போட்டியில் இருந்து விலகியதாக அவரது தந்தை பி.வி.ரமணா கூறி உள்ளார்.
‘ஐதராபாத்தில் அக்டோபர் முதல் வாரத்தில் எங்களுக்கு முக்கியமான வேலை உள்ளது. பூஜைகள் செய்ய வேண்டியிருப்பதால், இதில் சிந்து கட்டாயம் பங்கேற்க வேண்டி உள்ளது. எனவே, அவர் தாமஸ், உபேர் கோப்பை போட்டியில் இருந்து விலகினார்’ என்று ரமணா மேலும் தெரிவித்தார்.
போட்டியில் இருந்து விலகியதற்கு கொரோனா அச்சம் ஏதேனும் காரணமா? என்று கேட்டதற்கு, சிந்துவுக்கு கொரோனா என்பது இரண்டாவது பிரச்சினைதான் என்றார் ரமணா. தாமஸ் உபேர் கோப்பை தொடருக்கு பிறகு நிலைமை முற்றிலும் சரியானால், மற்ற போட்டிகளிலும் பங்கேற்பது பற்றி சிந்து முடிவு செய்வார் என்றும் அவர் தெரிவித்தார்.
தாமஸ், உபேர் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்குமா? என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதற்காக விளையாட்டு ஆணையம் மற்றும் பேட்மிண்டன் சங்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். கொரோனா அச்சம் காரணமாக சீனா, தைபே உள்ளிட்ட நாடுகள் இப்போட்டியில் இருந்து விலகி உள்ளன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் ஆல் இங்கிலாந்து போட்டிக்கு பிறகு எந்த போட்டி தொடரும் நடைபெறவில்லை. 7 மாத இடைவெளிக்கு பிறகு தாமஸ், உபேர் கோப்பை தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.