தாய்லாந்தில் நடந்த தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்தியா முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்தது.
நேற்று முன் தினம் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா 3-0 என்ற கணக்கில் 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை வீழ்த்தியது. 73 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்தது.
ஒற்றையர் பிரிவில் லக்சயா சென்னும், இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ்சிரக் ஷெட்டி ஜோடியும், மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்ரீகாந்தும் வெற்றி பெற்றனர்.
புதிய வரலாறு படைத்த இந்திய பேட்மிண்டன் அணிக்கு ரூ.1 கோடி ரொக்க பரிசு வழங்கப்படும் என்று மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாகூர் அறிவித்துள்ளார்.
இதே போல் இந்திய பேட்மிண்டன் சங்கமும் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்து இருக்கிறது. அணியின் உதவி பணியாளர்களுக்கு ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாமஸ் கோப்பையை வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கரும் இந்திய பேட்மிண்டன் அணியை பாராட்டி உள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசனும் இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.