தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வான அமிதாப் பச்சான்
1970-களின் முற்பகுதியில் இந்தி திரையுலகில் நுழைந்து மிகப்பெரிய கதாநாயகனாக உயர்ந்து, பின்னர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் எனப்படும் உச்ச நட்சத்திர அந்தஸ்தை பல ஆண்டுகாலமாக தக்கவைத்து வருபவர் அமிதாப் பச்சன்(76).
நூற்றுக்கும் அதிகமான படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள அமிதாப் பச்சன் தற்போதும் தனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, மராட்டிய மாநில அரசின் விருதுகள் மற்றும் மத்திய அரசின் தேசிய விருதுகளை பலமுறை பெற்றவரான அமிதாப் பச்சன் மத்திய அரசின் மிக உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷன் விருதுகளாலும் கவுரவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்திய சினிமா துறையின் மிகப்பெரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு அமிதாப் பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இன்று அறிவித்துள்ளார்.
இரண்டு தலைமுறைகளாக தனது நடிப்பால் நம்மை மகிழ்வித்து ஊக்கமூட்டிய அமிதாப் பச்சன் ஒருமனதாக தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்காக ஒட்டுமொத்த நாடும் உலகச் சமுதாயம் மகிழ்ச்சி அடைந்துள்ளது. அவருக்கு எனது நல்வாழ்த்துகள் என தனது டுவிட்டர் பக்கத்தில் பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டுள்ளார்.