தவம்- திரைப்பட விமர்சனம்
ஆஸிப் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் வசி ஆஸிப் தயாரிப்பில், ஆர்.விஜயானந்த் – ஏ.ஆர்.சூரியன் இயக்கத்தில் அறிமுக நாயகன் வசி, அறிமுக நாயகி பூஜாஸ்ரீ, சீமான் ஆகியோரது நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘தவம்’ எப்படி என்பதை பார்ப்போம்.
ஹீரோயின் பூஜாஸ்ரீயை பலர் பெண் பார்த்து சென்றாலும், அவர் திருமணத்திற்கு மட்டும் மறுப்பு தெரிவித்து வருகிறார். அதற்கான காரணமாக தனது காதல் கதை பிளாஷ்பேக்கை சொல்ல, கிராமத்து நபரான ஹீரோ வசிக்கும், பூஜாஸ்ரீக்குமான காதலுக்கு வில்லனாக அவர்களது குழந்தைப்பருவ நண்பர் வர, அவர்கள் இணைந்தார்களா இல்லையா, என்பது ஒரு பக்கம் இருக்க, இவர்களின் காதல் கதைக்குள் வரும் பிளாஷ்பேக்கில், விவசாய நிலங்களை அபகரித்து மக்களுக்கு கேடு விளைவிக்கும் கெமிக்கல் தொழிற்சாலை கட்ட நினைக்கும் கூட்டத்திற்கு எதிராக போராடும் சீமானின் கதை வருகிறது. இந்த இரண்டு கதைகளுக்கும் உள்ள தொடர்பும், காதல் ஜோடிகள் சேர்ந்தார்களா, இல்லையா, சீமான் தனது போராட்டத்தில் வெற்றிபெற்றாரா இல்லையா, என்பது தான் படத்தின் மீதிக்கதை.
அறிமுக ஹீரோவான வசி, ஹீரோவுக்கான அனைத்து தகுதிகளையும் கொண்டவராக இருக்கிறார். சண்டைக்காட்சி, நடனக் காட்சி, காதல் காட்சி என அனைத்திலும் தனது முழு திறமையையும் காண்பித்திருப்பவர், நடிப்பில் வேறு சில நடிகர்களையும் கொண்டு வந்துவிடுகிறார். அதை சற்று தவிர்த்துவிட்டு, தனது ஒரிஜினாலிட்டியை காண்பித்தால் கோலிவுட்டில் நல்ல நடிகர் என்ற பெயர் எடுக்கலாம்.
ஹீரோயின் பூஜாஸ்ரீ, நடிப்பு மட்டும் இன்றி, கமர்ஷியல் நாயகிக்கு உண்டான அம்சத்தோடு வலம் வருகிறார். வெறுமனே காதலுக்காக மட்டும் பயணிக்காமல் கதையுடனும் பயணித்திருக்கும் நாயகியின் நடிப்பும் ஓகே தான்.
சீமான் தான் படத்தின் மிகப்பெரிய பலம். தொய்வு ஏற்படும் திரைக்கதையில் சீமானின் பகுதி நமக்கு உற்சாகம் கொடுப்பதோடு, படத்தை உன்னிப்பாக கவனிக்கவும் வைக்கிறது. விவசாயிகளுக்காக மட்டும் இன்றி விவசாயத்தின் பலம் தெரியாமல் இருக்கும் பொதுமக்களுக்காகவும் பேசும் சீமானின் அனைத்து வசனங்களும் கவனிக்க வைக்கிறது.
சிங்கம்புலி, பிளாக் பாண்டி, கூல் சுரேஷ், கிளி ராமச்சந்திரன், வெங்கல்ராவ், தெனாலி என காமெடிக்கு பெரிய பட்டாளமே இருந்தாலும், அந்த ஏரியா சற்று வரட்சியாக தான் இருக்கிறது.
சிறு வேடமாக இருந்தாலும் போஸ் வெங்கட் கவனிக்க வைக்கிறார். சிவன்னன் என்ற வேடத்தில் வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் விஜய் ஆனந்தும், மாமா புலிகேசியாக நடித்திருக்கும் இயக்குநர் சூரியனும் இயக்கத்தைக் காட்டிலும் நடிப்பில் அதிகமாக அப்ளாஷ் பெருகிறார்கள்.
வேல்முருகனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருக்கிறது.
காதல் கதையாக இருந்தாலும், சமூக அக்கறையோடு திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர்கள் ஆர்.விஜயானந்த் – ஏ.ஆர்.சூரியன், விவசாயம் குறித்து பேசியிருக்கும் அத்தனையும் எதிர்கால தலைமுறைக்கானதாக இருக்கிறது. காதல் எப்பிசோட்டில் புதிய முயற்சியை மேற்கொண்டிருப்பவர்கள், அதற்கான திரைக்கதை அமைக்கும் போது மட்டும் பழைய பாணியிலேயே பயணித்திருப்பது படத்திற்கு சற்று தொய்வை ஏற்படுத்தி விடுகிறது.
இருப்பினும், சீமானை வைத்து அதை சமாளித்திருப்பவர்கள், விவசாயிகளின் ஏக்கத்தையும், துக்கத்தையும் படம் பார்ப்பவர்கள் உணரும் விதத்தில் அழுத்தமாகவே சொல்லியிருக்கிறார்கள்.
மொத்தத்தில், குறைகளை தவிர்த்துவிட்டு நிறைகளை மட்டுமே பாராட்டக்கூடிய சமூகத்திற்கான ஒரு படமாக இந்த ’தவம்’ உள்ளது.
-ரேட்டிங் 2.5/5