தள்ளுபடி விலையில் ரஷ்யாவில் இருந்து அனுப்பப்பட்ட கச்சா எண்ணெய் பாகிஸ்தான் வந்தடைந்தது – பிரதமர் ஷெரீப் தகவல்

ரஷியா தள்ளுபடி விலையில் வழங்கும் கச்சா எண்ணெய்களை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல் கராச்சி வந்தடைந்ததாக, பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

கடும் பண வீழ்ச்சியால் விலைவாசி உயர்வு அதிகமாக காணப்படும் நிலையில், இது சற்று ஆறுதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 262 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதற்கட்டமாக ரஷியாவில் இருந்து 45 ஆயிரம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கராச்சி வந்தடைந்துள்ளது.

”நான் வழங்கிய மற்றொரு வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்த முதல் சரக்கு கப்பல் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் வந்தது என்பதை பெருமையாக அறிவித்துக்கொள்கிறேன். நாளையில் இருந்து வினியோகம் செய்யப்படும். இன்றைய நாள் மாற்றத்தை ஏற்படுத்தும் நாள். எரிசக்தி பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சியில் ஒருபடி முன்னேறியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேரல் என்ற வகையில் பாகிஸ்தான் ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான்- ரஷியா இடையிலான பேச்சுவார்த்தையின்போது, கடந்த 2022-ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதிநிதிகள் கச்சா எண்ணெய் விலையில் தள்ளுபடி அதிக அளவில் தரும்படி கேட்டுக்கொண்டது.

ஆனால், ரஷியா 30 சதவீத தள்ளுபடி கொடுக்க மறுத்துவிட்டது. இந்த வருடம் தொடக்கத்தில் ரஷிய பிரதிநிதிகள் பாகிஸ்தான் சென்று காப்பீடு மற்றும் அடமானம் போன்ற தொழில்நுட்ப சிக்கல்களை தீர்ப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ரஷியா திருப்தி அடைய, கச்சா எண்ணெய் வழங்க ரஷியா சம்மதம் தெரிவித்தது.

கடந்த ஆண்டு பாகிஸ்தான் ஒரு நாளைக்கு 1,54,000 பேரல் என்ற வகையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது. இதில் 80 சதவீதம் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது. ஜூன் 2- ந்தேதி முடிவடைந்த நிலையில் பாகிஸ்தானின் மொத்த அன்னிய செலாவணி 3.9 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது.

மே மாதம் 38 சதவீதமாக இருந்த பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 36.4 சதவீதமாக அதிகரித்தது. ஏற்கனவே பொருளாதார சிக்கலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தானில் கடந்த வருடம் கனமழை பெய்து 33 மில்லியன் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது 12.5 பில்லியன் டாலர் வகையில் பொருளாதார சேதம் ஏற்பட்டது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news