X

தளர்வு இல்லா ஊரடங்கால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரிப்பு

தமிழகத்திலேயே கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் இருப்பதால் சென்னையில் மட்டும் இன்னும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் சென்னையை அடுத்த அத்திப்பட்டு, தாமரைப்பாக்கம், பெரனூர், அருமந்தை, வேப்பம்பட்டு, புதுவாயல், செவ்வாய்ப்பேட்டை, கந்தமேடு உள்பட திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை நோக்கி மதுபிரியர்கள் செல்கிறார்கள்.

இந்த நிலையில் தளர்வு இல்லா முழு ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுவதால், மேற்கண்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று மது பிரியர்கள் ஆர்வமாக திரண்டனர். டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. எனவே மது பிரியர்கள் வரிசையில் நின்று தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

இதில் பெரும்பாலான கடைகளில் ரூ.120 மற்றும் ரூ.140க்கு கிடைக்கும் குவார்ட்டர் பாட்டில்கள் கிடைக்கவில்லை. இதனால் மது பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். வேறு வழி இல்லாமல் அதிக விலையுள்ள மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

அதேவேளை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அத்திப்பட்டு, தாமரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இருந்து அதிகளவு மதுபாட்டில்கள் எடுத்துச் செல்லப்பட்டு நகர் பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் அதிக அளவு மது பாட்டில்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் பணியில் போலீசாரும் மாவட்ட எல்லையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

Tags: south news