தலைமறைவான நடிகை மீரா மிதுன் – தேடும் போலீஸ்
நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், தாழ்த்தப்பட்டோர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு மீராமிதுன் மீதும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அதன்பின்பு இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது சாம் அபிஷேக் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆஜரான நிலையில் நடிகை மீரா மிதுனும் அவரது வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.
இது தொடர்பாக மீரா மிதுனுக்கு 2-வது முறையாக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆகஸ்ட் 29-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. முன்பை போலவே இப்போதும் சாம் அபிஷேக் மட்டும் நேரில் ஆஜராகினார்.
அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், மீரா மிதுன் தலைமறைவாக உள்ளதாகவும் அவரை தேடி வருவதாகவும். தெரிவித்தார். மேலும், விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவார் என்றும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதி வருகிற செப்டம்பர் 14-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.