Tamilசெய்திகள்

தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சர்? – கைது செய்வதில் தீவிரம் காட்டும் சி.பி.சி.ஐ.டி போலீஸ்

கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனது சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி.அலுவலத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதையடுத்து, நிலமோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதனால் விஜயபாஸ்கர், கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த கரூர் முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனுவை நேற்று தள்ளுபடி செய்தார்.

இந்த நிலையில், முன்ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் வடமாநிலத்திற்கு தப்பிச்சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தலைமறைவாக உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி.போலீசார் வடமாநிலத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இதனால் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.