X

தலிபான்களிடம் அடிபணிந்த பஞ்ச்சீர் படை! – 4 தலைவர்கள் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து நாடு முழுவதையும் கடந்த 15-ந்தேதி தலிபான் படையினர் கைப்பற்றினார்கள். அதிபர் அஷ்ரப்கனி நாட்டை விட்டு ஓடி விட்டார்.

இதைத் தொடர்ந்து புதிய ஆட்சி அமைக்கும் முயற்சியில் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர். இதுசம்பந்தமாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

ஆப்கானிஸ்தானில் அனைத்து மாகாணங்களும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்த நிலையில் அங்குள்ள பஞ்ச்சீர் மாகாணம் மட்டும் கட்டுப்பட மறுத்தது.

இந்த மாகாணத்தில் முன்னாள் புரட்சிப்படை தளபதி அகமதுஷாமசூத் மகன் அகமது மசூத் தலைமையிலான வடக்கு கூட்டணி படை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அந்த பகுதியை கைப்பற்ற தலிபான்கள் முயற்சித்தனர்.

இதற்கு வடக்கு கூட்டணி படை கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையே சண்டை மூண்டது. தலிபான்கள் படைகளை உள்ளே நுழைய விடாமல் இரு வாரங்களாக வடக்கு கூட்டணி படையினர் தடுத்து வைத்திருந்தனர்.

இதையடுத்து மாகாணத்தின் 4 பக்கங்களில் இருந்தும் தலிபான் படையினர் உள்ளே நுழைந்தனர். அவர்களை எதிர்த்து வடக்கு கூட்டணி படையினரால் போராட முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தலிபான் படைகள் முன்னேறியது.

இதையடுத்து வடக்கு கூட்டணி படை முக்கிய இடங்களை விட்டு பின்வாங்கியது. இந்த நிலையில் தலிபான்கள் தாக்கியதில் வடக்கு கூட்டணி படையினரின் செய்தி தொடர்பாளர் பாகீம்தாஸ்தி, முக்கிய தளபதிகள் கைதர்கான், முனீப் அமிலி, வாதூர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இதனால் வடக்கு கூட்டணி படை நிலை குலைந்தது. இந்த படையின் தலைவர் அகமதுமசூத், முன்னாள் துணை அதிபர் அமர்துல்லா சலே ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். அவர்கள் ரகசிய இடத்தில் பதுங்கி இருப்பதாக கருதப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பஞ்ச்சீர் பகுதி தலிபான்களிடம் வீழ்ந்துள்ளது. அங்கு வடக்கு கூட்டணி படையின் தளபதிகள், தலைவர்கள் தலிபான்களிடம் சிக்கியுள்ளனர். அவர்களின் கதி என்ன ஆகுமோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.