ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் ஸ்டார்க், ஹாசில்வுட், பேட் கம்மின்ஸ், ஜேம்ஸ் பேட்டின்சன், நாதன் லயன் கூட்டணி அபாரமாக செயல்பட்டு வருகிறது. இந்த சீசனில் ஸ்டார்க் 25 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார், சராசரி (16.96). நாதன் லயன் 17 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார், சராசரி (27.94).
பேட் கம்மின்ஸ் 16 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார், சராசரி (25.56). ஹாசில்வுட் 11 விக்கெட், சராசரி (20.00), ஜேம்ஸ் பேட்டின்சன் 6 விக்கெட், சராசரி (11.50).
இந்நிலையில் இந்த கூட்டணி ஆஸ்திரேலியாவின் எந்தவொரு காலக்கட்டத்தின் பந்து வீச்சு யுனிட்டுடன் ஒப்பிட முடியும் என மெக்ராத் தெரிவித்துள்ளார்.
கில்லெஸ்பி, பிரெட் லீ, ஷான் வார்னே உடன் பந்து வீச்சில் அசத்திய மெக்ராத் இதுகுறித்து கூறுகையில் ‘‘அவர்கள் பந்து வீச்சில் சரியான இடத்தில் இருக்கிறார்கள். இதில் சந்தேகம் ஏதும் இல்லை. அவர்களுடைய புள்ளி விவரங்கள் அதை காட்டுகிறது. அவர்களால் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் எந்தவொரு காலக்கட்ட யுனிட்டுடன் போட்டியிட முடியும்.
மெல்போர்ன் டெஸ்டில் 3-வது நாளில் ஜேம்ஸ் பேட்டின்சன் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோரின் ஒரு ஸ்பெல், உலகில் நீங்கள் பார்த்த சிறந்ததில் ஒன்றாகும்.
மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹாசில்வுட் சிறப்பாக உள்ளனர். நான்கு பேரும் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள். சுழற்பந்து வீச்சில் நாதன் லயன் உள்ளார். இது சிறந்த பந்து வீச்சு அட்டக் யுனிட்’’ என்றார்.