Tamilவிளையாட்டு

தற்போதைய நிலையில் ஐபிஎல் சாத்தியமில்லை – பிசிசிஐ பொருளாளர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் விளையாட்டு போட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எந்தவொரு வீரரும், மைதானத்திற்கு சென்று பயிற்சி பெற முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில் நாடு தழுவிய பொதுமுடக்கம் 4-வது முறையாக வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தளர்த்தியுள்ளது. ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டு மைதானங்களையும், விளையாட்டு அரங்குகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடந்த 54 நாட்களாக வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மைதானத்தில் சென்று வழிகாட்டு நெறிமுறையின்படி பயிற்சிகளை மேற்கொள்ளலாம். போட்டிகளையும் நடத்தலாம்.

இதுகுறித்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய பொருளாளர் அருண் துமால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விளையாட்டு மைதானங்கள் மற்றும் பயிற்சிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. விமான பயணங்களுக்கு வருகிற 31-ந்தேதி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதற்கு முன்பு வீரர்களுக்கு அனுமதி அளிக்க முடியாது. இதனால் கிரிக்கெட் வாரியம் வீரர்களின் பயிற்சிக்காக காத்திருக்கிறது.

வீரர்கள் நலன் மிகவும் முக்கியமானது. வைரசை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசின் முயற்சிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எந்த பாதிப்பும் ஏற்படுத்த மாட்டோம். வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி அந்தந்த மாநில அளவில் பயிற்சிகளை மேற்கொள்ள அறிவுரை வழங்கப்படும்.

தற்போதைய நிலையில் ஐபிஎல் சாத்தியமில்லை. ஏனென்றால் பயணத்திற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயணம் செய்ய முடியாமல் எப்படி ஐபிஎல் போட்டியை நடத்த முடியும். மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை படித்துக் கொண்டிருக்கிறோம். மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களையும் படிக்க வேண்டும். அதனடிப்படையில் திட்டம் தீட்டுவோம்.

இவ்வாறு அருண் துமால் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *