Tamilவிளையாட்டு

தற்போதைய காலக்கட்டத்தில் விராட் கோலி தான் நம்பர் ஒன் – முகமது யூசுப் கருத்து

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருடன் ஒப்பிடுவது உண்டு.

தற்போது பாகிஸ்தான் அணி கேப்டனாக இருக்கும் பாபர் அசாமும் சிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிட்டு வருகிறார்கள்.

விராட் கோலி மைதானத்திற்கு வெளியில் உடற்தகுதி, பயிற்சி ஆகியவற்றிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்த முகமது யூசுப் விராட் கோலி, பாபர் அசாமில் யார் சிறந்தவர்கள் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

முகமது யூசுப் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் குறித்து கூறுகையில் ‘‘நான் விராட் கோலியின் பயிற்சியை பார்த்ததில்லை. ஆனால் சில பயிற்சி வீடியோக்களை டுவிட்டர் அல்லது சில இடங்களில் பார்த்துள்ளேன். இன்றைய காலக்கட்டத்தில், மாடர்ன் கிரிக்கெட் என்றால் என்ன? என்று என்னிடம் கேட்டால், பயிற்சி பற்றிதான் நான் சொல்வேன். வீரர்கள் இன்று கட்டுக்கோப்பாகவும், வேகமாகவும் உள்ளனர். வீராட் கோலியின் அபாரமான ஆட்டத்திற்குப் பின்னால் இதுதான் இருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் விளாசியுள்ளார். ஒருநாள் போட்டியில் 12 ஆயிரம் ரன்களை கடந்த நிலையில், டெஸ்ட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை நெருங்கி வருகிறார். டி20 கிரிக்கெட்டிலும் அபாரமான சராசரி வைத்துள்ளார். மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் உயர்தர ஆட்டத்தை வைத்துள்ளார். இன்றைய காலக்கட்டத்தில் அவர்தான் நம்பர் ஒன் வீரர்.

கடந்த கால வீரர்களை தற்போதைய வீரர்களுடன் ஒப்பிடுவது நியாயம் அல்ல என்பதை முன்னதாகவே நான் தெரிவித்துள்ளேன். இருந்தாலும் விராட் கோலியின் ஆட்டம் நம்பமுடியாத வகையில் உள்ளது’’ என்றார்.