பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முன்னாள் கிரிக்கெட் வீரர். பாகிஸ்தான் அணியை திறமையாக வழிநடத்திச் சென்று உலக கோப்பையை வென்று கொடுத்தவர்.
அவர் விளையாடிய காலத்தில் இந்திய அணியை அடிக்கடி வீழ்த்தியிருக்கிறோம் என்று பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இம்ரான் கான் நினைவு கூர்ந்துள்ளார்.
இதுகுறித்து இம்ரான் கான் கூறுகையில் “எங்களுடைய காலத்தில், இந்திய அணிக்காக நான் வருந்தியிருக்கிறேன். அவர்களுக்கு எதிராக நாங்கள் அடிக்கடி வெற்றி பெற்றிருக்கிறோம். எங்களுக்கு எதிராக விளையாடும்போதெல்லாம் இந்திய அணி வீரர்கள் பதற்றத்துடன் காணப்படுவார்கள்.
இந்திய கேப்டன்களுக்கு எதிராக டாஸ் சுண்ட செல்லும்போது, அவர்கள் முகத்தை பார்ப்பேன். அப்போது அவர்களுடைய முகத்தில் பயம் தெரியும்.
எங்களுக்கு எதிராக விளையாடிய இந்திய அணி தற்போது இருக்கும் அணி போன்றதல்ல. தற்போதுள்ள இந்திய அணி மிகவும் சிறந்த அணியாக உள்ளது. எங்களுடைய காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் தலைசிறந்த அணியாக இருந்தது” என்றார்.
இம்ரான் கான் 1971-ல் இருந்து 1992 வரை பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.