தென்காசியை அடுத்த சுப்பனூரை சேர்ந்தவர் வெள்ளைத்துரை. இவர் 27 ஆண்டுகளுக்கு முன் திருமலைக்கனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு மே 7-ந்தேதி பூச்சிமருந்தை குடித்தனர். அதில் திருமலைக்கனி இறந்துவிட, 4 நாள் சிகிச்சைக்குப்பிறகு வெள்ளைத்துரை உயிர் பிழைத்தார்.
அதையடுத்து திருமலைக்கனியின் சகோதரர், தனது அக்காவை தற்கொலை செய்ய தூண்டியதாக அளித்த புகாரின் பேரில் வெள்ளைத்துரை கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதற்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையுடன், ரூ.2,500 அபராதமும், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனை, ரூ.2,500 அபராதமும் விதித்து திருநெல்வேலி செசன்ஸ் கோர்ட்டு கடந்த 2009-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக வெள்ளத்துரை தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை, தற்கொலைக்கு தூண்டியதற்கு விடுக்கப்பட்ட 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையை 3 ஆண்டுகளாக குறைத்ததுடன், செசன்ஸ் கோர்ட்டின் தீர்ப்பின் மீதமுள்ள தண்டனையை உறுதி செய்தது.
சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை தீர்ப்புக்கு எதிராக வெள்ளைத்துரை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2019-ம் ஆண்டு மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கில் நேற்று கூறிய தீர்ப்பு வருமாறு:-
தற்கொலைக்கு காரணமான வெறும் தொல்லை கொடுக்கும் செயல், தற்கொலைக்கு தூண்டுவது ஆகாது என அமலேந்து பால் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பு கூறியுள்ளது. ஒரு நபரை ஏதாவது செய்ய தூண்டும் செயலே தற்கொலைக்கு தூண்டுவதாகும். குற்றம்சாட்டப்பட்ட நபரின் செயல்களால் அல்லது செயல்படாமல் இருப்பதால் தற்கொலை தவிர வேறுவழியில்லாத நிலைக்கு தள்ளப்படும்போதே தற்கொலைக்கு தூண்டியதாக முடிவுக்குவர முடியம்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை, சம்பவம் நடந்த நாளில் மனுதாரர் சண்டையிட்டதாக குற்றச்சாட்டப்பட்டது. அது தவிர அவர் தற்கொலைக்கு தூண்டியதாக எவ்வித ஆதாரமும் இல்லை. மேலும் மனுதாரரும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். சந்தர்ப்ப சூழல்களை வைத்து பார்க்கும்போது, தற்கொலைக்கு தூண்டியதாக எவ்வித ஆதாரமும் இல்லை. தற்கொலைக்கு தூண்டியதாக செசன்ஸ் கோர்ட்டும், ஐகோர்ட்டும் தண்டனை விதித்து தவறு இழைத்துள்ளன. இதன்படி சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை, செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்புகள் ரத்து செய்யப்படுகின்றன.
இவ்வாறு கூறியுள்ளனர்.