X

தற்காப்புகலை நிஜ வாழ்க்கையிலும் தைரியம் கொடுத்தது – நடிகை அமலா பால்

அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’. ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்க, அருண் கதை எழுதியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ஜோன்ஸ், நடிகை அமலாபால், இயக்குனர் கே.ஆர்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினருடன் நடிகர், இயக்குனர், அரசியல் பிரமுகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ், இயக்குனர் திருமலை ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

நடிகை அமலாபால் பேசும்போது, ‘இந்த படம் ரொம்ப சந்தோசத்தை கொடுத்தது. தயாரிப்பாளருக்கு கண்டிப்பா நல்ல லாபத்தை கொடுக்கும். காரணம் படத்தோட கதை. ஒரு இளம்பெண் எந்த உதவியுமே இல்லாம தனி ஆளா காட்டுல சிக்கிக்கிட்ட பிறகு அதுல இருந்து எப்படி வெளியில வர்றாங்கறது தான் படம். இன்னிக்கு நாடு இருக்கற நிலையில பெண்கள் பாதுகாப்புங்கறது எந்த அளவுக்கு இருக்குங்கிறது தான் பெரிய விவாதமா இருக்கு. இந்த சூழ்நிலையில இப்படி ஒரு படம் வர்றது ஒட்டுமொத்த பெண்களுக்கான படமாக இருக்கும்.

இந்த படத்தோட டீம் பக்காவா திட்டமிட்டு உழைச்சாங்க. கதை சொல்லும் போது கூட பக்கா பிளான் பண்ணித்தான் வந்திருந்தாங்க. இந்த படத்துக்காக புதுசா ‘கிராமகா’ என்னும் தற்காப்பு கலையை கத்துக்கிட்டேன். ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் கூட ஒரு சண்டை போட்டுருக்கேன். அந்த சண்டை பெரிசா பேசப்படும். கதை ஆசிரியர் அருண் அவ்வளவு திறமையா இந்த கதையை எழுதி இருந்தாரு. படம் ஷூட் போறதுக்கு முன்னாடியே எனக்கான ஸ்டண்ட் காட்சிகளை ஷூட் பண்ணி டெமோ காட்டி எனக்கு நம்பிக்கை கொடுத்தாங்க. இயக்குனர் வினோத், நிர்வாக தயாரிப்பாளர் கவாஸ்கர், கதாசிரியர் அருண் இவர்கள் எல்லாம் பெரிய போராட்டத்தைச் சந்தித்து இருக்கிறார்கள். இவர்கள் கஷ்டம் முன்னாடி படத்தில் நான் பட்ட கஷ்டம் எல்லாம் ஒன்றுமே இல்லை. ரொம்ப இளமையான டீம். இவர்கள் இருக்கிற படத்தில் நான் இருக்கிறது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.

ஒரு ஹீரோயின் காட்டுக்குள் ஆக்‌ஷன் பண்ணா எப்படி இருக்கும் என்று ஒரு பேச்சு இருந்தது. ஆனால் கதை அதை சரி செய்துவிடும். எங்க டீமில் எல்லாரும் பெண்கள் பலத்தை உணர்ந்தவர்கள். தயாரிப்பாளர் ஜோன்ஸ் மைனாவில் இருந்தே நல்ல நண்பர். சிறுவன் பிரவீன் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறான். நிச்சயமாக அவனுக்கு தேசிய விருது கிடைக்கும். மேலும் இந்த படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என்னோடு நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தில் வேலை செய்த அனைவரும் இப்படத்தை ஒரு பேஷனாக எடுத்து வேலை செய்தார்கள். இந்தப்படத்திற்காக நான் கற்றுக்கொண்ட தற்காப்பு கலை, எனக்கு நிஜ வாழ்க்கையிலும் ரொம்ப தைரியத்தைக் கொடுத்துள்ளது. கதை பிடித்திருந்தால் மட்டுமே படத்தில் நடிப்பேன். கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க நிறைய நடிகைகள் இருக்கிறார்கள்’ என்றார்.