தர்மபுரி இளவரசன் மரணம் தற்கொலை தான்! – விசாரணை அறிக்கை தாக்கல்
தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்தவர் இளவரசன். செல்லம்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் காதலித்து வந்தனர். கடந்த 2012-ம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை பயணத்தை தொடங்கினர்.
திவ்யா வேறொரு சமூகத்தைச் சேர்ந்த இளவரசனை கரம்பிடித்தது அவரது பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திவ்யாவை வீட்டுக்கு வருமாறு பெற்றோர் அழைத்தனர். அந்த நேரத்தில், திவ்யா மறுத்து விட்டார். இதனால் திவ்யாவின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து இருதரப்பினருடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது நத்தம்காலனி, அண்ணாநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்த வீடுகள் சேதப்படுத்தப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டன.
இந்தநிலையில் திடீரென்று இளவரசன் வீட்டில் இருந்து வெளியேறிய திவ்யா, தனது தாய் வீட்டுக்கு சென்றார். இதனால், காதல் மனைவியை அடைய ஐகோர்ட்டை நாடினார் இளவரசன். அவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின் ஐகோர்ட்டில் ஆஜரான திவ்யா, குழப்பமான மனநிலையில் இருந்தார். பல்வேறு கட்டமாக நடந்த இந்த விசாரணையின் போது ஒருமுறை கோர்ட்டு அறைக்குள் திவ்யா மயங்கி விழுந்தார். இறுதி விசாரணையின் போது திவ்யா, தனது தாயாருடன் செல்வதாக தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில் தான், 2013-ம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி இளவரசன் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.
இந்த மரணம் கொலையா? தற்கொலையா? என்று பல்வேறு விவாதங்கள் நடந்தன. இளவரசனின் மரணம் திட்டமிட்ட ஆணவக்கொலை என்று இளவரசன் தரப்பு கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தது.
இதைத்தொடர்ந்து இளவரசனின் மரணம் நடந்தது எப்படி? என்பதை கண்டறிய சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இருந்தபோதிலும் இளவரசனின் மரணத்தில் உண்மை கண்டறியப்பட வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து இளவரசன் தரப்பு அழுத்தம் கொடுத்தது.
இதனால், இளவரசன் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2013-ம் ஆண்டு ஜூலை 8-ந் தேதி உத்தரவிட்டார்.
ஆணையம் தனது விசாரணையை முடித்து 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 20-ந் தேதி விசாரணை அறிக்கையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அளித்தது.
அந்த விசாரணை அறிக்கையை தமிழக அரசு இதுவரை வெளியிடாத நிலையில் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய சாராம்சங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
அந்த அறிக்கையில் உள்ள முக்கிய விவரம் வருமாறு:-
இளவரசன் இறப்பு குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையில், ‘இளவரசனின் மரணம் ரெயில் விபத்தின் மூலம் தான் ஏற்பட்டுள்ளது. உடலில் உள்ள காயங்கள் ரெயில் சக்கரத்தின் மூலம் ஏற்பட்டுள்ளது. அந்த காயங்கள் வேறுவிதமான தாக்குதல் மூலம் ஏற்பட்டவை அல்ல, தாக்குதல் நடந்ததற்கான தடயங்கள் இல்லை. காயங்களை வைத்து பார்க்கும்போது ஓடும் ரெயிலில் விழுந்து இறந்துள்ளது தெரிகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
ஐகோர்ட்டு உத்தரவுப்படி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு இளவரசனின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்து அறிக்கை அளித்துள்ளது. அதில், இளவரசனின் மரணம் கனமான பொருள் தலையை தாக்கியதில் நிகழ்ந்துள்ளது. தலைக்காயம் மற்றும் இதர காயங்கள் அனைத்தும் ஓடும் ரெயிலில் விழுந்ததன் காரணமாகவே ஏற்பட்டுள்ளது. உடல் அளவில் கொடுமைப்படுத்தியதற்கான எந்த தடயமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 2 பிரேத பரிசோதனை அறிக்கைகளை வைத்து பார்க்கும்போது, இளவரசன் மரணம் ஓடும் ரெயில் முன் விழுந்த காரணத்தால் ஏற்பட்ட காயங்கள் காரணமாக நிகழ்ந்திருக்கக்கூடும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, இளவரசனின் உடலில் இறப்பதற்கு முன்பு மனித தாக்குதல் மூலம் ஏற்பட்ட காயங்கள் எதுவும் இல்லை என்றும் 2 அறிக்கைகளும் கூறுகிறது.
இளவரசன் மரணம் ஓடும் ரெயில் முன்பு விழுந்ததால் ஏற்பட்டது என்பது பிரேத பரிசோதனை அறிக்கைகள் மூலம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
இறந்து போன இளவரசனின் உடல் உள்ளுறுப்புகளை பகுப்பாய்வு செய்த சேலம் தடய அறிவியல் ஆய்வகம், உடல் உள்ளுறுப்புகளில் விஷத்தன்மை உள்ள பொருட்கள் எதுவும் இல்லை என்று அறிவித்துள்ளது.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு இளவரசன் உருக்கமாக எழுதி இருந்ததாக கூறி 4 பக்கங்கள் கொண்ட கடிதம் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், ‘எனது (இளவரசன்) சாவுக்கு யாரும் காரணம் இல்லை. இது என் சுய முடிவாகும். நான் இறந்த பின்பு என்னை பார்க்க திவ்யா வருவாள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதுவே எனது கடைசி ஆசை ஆகும். அப்படி திவ்யா வந்தால் அவளை யாரும் திட்ட வேண்டாம். அவளை அனுமதிக்க வேண்டும். பிளஸ் அவளை யாரும் கோபமாக பேச வேண்டாம். திவ்யா ரொம்ப நல்ல பொண்ணு. அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னால் அவள் கஷ்டப்படக்கூடாது. வாழ்க்கையில் அவள் சந்தோஷமாக இருக்கட்டும். ஐ லவ் யூ சோ மச் திவ்யா….’ என்பது போன்று பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. அந்த கடிதம் இளவரசன் எழுதவில்லை என்றும், வழக்கை திசை திருப்ப அதுபோன்று ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் இளவரசன் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
ஆனால் தடய அறிவியல் ஆய்வக சோதனையில், அந்த கையெழுத்து இளவரசனின் கையெழுத்து தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த கடிதத்தின் அடிப்படையில் பார்க்கும்போது இளவரசன் மரணம் தற்கொலை தான் என்பது உறுதியாகிறது.
ரெயில்வே தண்டவாளத்தில் இருந்து இளவரசனின் கைக்கடிகாரம்(வாட்ச்) கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த கைக்கடிகாரம் 13.20 என்ற நேரத்தை காட்டியபடி ஓடாமல் கிடந்துள்ளது. அந்த சமயத்தில் தான் ரெயில்வே தண்டவாளத்தை குர்லா எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்துள்ளது என்று ரெயில்வே அதிகாரிகள் கூறி உள்ளனர். இதை வைத்து பார்க்கும்போதும் ஓடும் ரெயில் முன் பாய்ந்து இளவரசன் உயிரை மாய்த்துக்கொண்டது தெரிகிறது.
திவ்யா தனது தாய் வீட்டுக்கு சென்றதும், இளவரசன் ஐகோர்ட்டை நாடி உள்ளார். வழக்கு முடிவில், திவ்யா தாயாருடனே செல்வதாக தெரிவித்ததால் மனம் உடைந்த இளவரசன் 2013-ம் ஆண்டு ஜூன் 7-ந் தேதி தற்கொலை செய்ய முயன்று பெற்றோரால் காப்பாற்றப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஐகோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் திவ்யா அவரது தாயாருடன் சென்றதில் இருந்தே இளவரசன் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக அவரது நண்பர்கள் அளித்த வாக்குமூலத்தின் மூலம் தெரிகிறது.
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போதும், திவ்யா தன்னை பிரிந்து சென்றதால் மனமுடைந்த இளவரசன் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்தது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. எனவே, இளவரசனின் மரணம் தற்கொலை தான் என்றும், அவரது மரணத்தில் வேறு காரணங்கள் எதுவும் இல்லை என்றும் விசாரணையின் போது ஆய்வு செய்யப்பட்ட ஆவணங்கள், மருத்துவம் மற்றும் தடய அறிவியல் சான்றிதழ்கள், பிரேத பரிசோதனை அறிக்கைகள், இளவரசனின் கடிதம், சாட்சியங்களின் வாக்குமூலங்கள், சந்தர்ப்ப சாட்சியங்களின் வாக்குமூலங்களில் இருந்து தெளிவாக தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பான போலீசாரின் விசாரணை பாராட்டுக்கு உரியது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.