‘தர்மதுரை’ இரண்டாம் பாகம் தயாராகிறது
தமிழில் வெற்றி பெற்ற படங்களின் 2-ம் பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. எந்திரன், விஸ்வரூபம், பில்லா, சாமி, சண்டக்கோழி, வேலை இல்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களின் 2-ம் பாகங்கள் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம் படம் 3 பாகங்களாக வெளியானது. இந்தியன், சந்திரமுகி படங்களின் இரண்டாம் பாகங்கள் தயாராகின்றன.
இந்த நிலையில் தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக உள்ளது. தர்மதுரை படம் 2016-ல் வெளியாகி வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக வரவேற்பை பெற்றது. இதில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். சீனுராமசாமி இயக்கினார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.
தர்மதுரை படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய எந்த பக்கம் பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் டுவிட்டர் பக்கத்தில் தற்போது அறிவித்து உள்ளார். இதில் நடிக்கும் கதாநாயகன், கதாநாயகி, இயக்குனர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.