தர்பார் பட ரிலீஸ்! – வேண்டுகோள் வைத்த ‘பிழை’ தயாரிப்பாளர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைக்குமாறு தயாரிப்பாளர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெற்றோர், ஆசிரியர் கண்டிப்பு இல்லாமல் வளரும் பிள்ளைகள் எதிர்காலம் எவ்வாறு சிதையும் என்பதை மையமாக வைத்து ‘பிழை’ படம் உருவாகியிருக்கிறது. சென்னை சர்வதேச படவிழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்ற இந்த படம் வரும் 3 ந்தேதி வெளியாகிறது. ராஜவேல் கிருஷ்ணா இயக்க, ஆர்.தாமோதரன் தயாரித்திருக்கிறார்.

சின்ன ‘காக்கா முட்டை’ ரமேஷ், ‘அப்பா’ நசாத், கோகுல், சார்லி, மைம் கோபி, ஜார்ஜ், இளன் நடித்திருக்கின்றனர். படம் பற்றி தயாரிப்பாளர் ஆர்.தாமோதரன் கூறியதாவது:- பெற்றோர்களை வெறுத்து, கல்வியை வெறுத்து ஓடும் சிறுவர்கள்தான் நீங்கள் கடந்து போகும் சிக்னலில் நின்று கையேந்துகிறார்கள். அவர்களுக்கான ஒரு படமாக இது இருக்கும். சிறுவர், சிறுமிகளின் கள்ளம் கபடமில்லாத கலாட்டாக்கள் இந்தக் கதையின் இன்னொரு பகுதி.

எனவே படம் சுவாரசியமாக எல்லோரும் ரசிக்கும் வகையில் இருக்கும். படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த காலகட்டத்துக்கு இது மிகவும் அவசியமான படம் என்று பாராட்டியதுடன் எந்த கட்டும் இல்லாமல் யு சான்றிதழ் கொடுத்தார்கள். ரஜினி சாருக்கு ஒரு சின்ன கோரிக்கை. பொங்கலுக்கு வெளியிட இருக்கும் தர்பார் படத்தை 9-ந்தேதியே வெளியிட இருக்கிறார்கள். இதனால் முந்தைய வாரங்களில் ரிலீசாகும் சின்ன படங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே தர்பார் படத்தை பொங்கல் அல்லது போகி பண்டிகைக்கு வெளியிட்டால் எங்களை போன்ற சின்ன படங்களுக்கு உதவியாக இருக்கும்’. இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools