‘தர்பார்’ படத்திற்கு மலேசியாவில் தடை!
நடிகர் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா உள்பட பலர் நடித்துள்ள தர்பார் என்ற திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த நிலையில், இப்படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி மலேசியாவைச் சேர்ந்த டி.எம்.ஒய். கிரியேஷன்ஸ் நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
அதில், ‘ரஜினி நடித்த 2.0 படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தை தயாரிக்க ரூ.12 கோடியை, ஆண்டுக்கு கடனும் கொடுத்தோம். அந்த கடன் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.23 கோடியே 70 லட்சத்தை லைக்கா நிறுவனம் தரவேண்டும். இந்த தொகையை தராமல், படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்து லைகா நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ‘தர்பார் படத்தை வெளியிட அனுமதித்தால், மனுதாரருக்கு கிடைக்க வேண்டிய பெரும் தொகை கிடைக்க காலதாமதம் ஆகலாம். ஒருவேளை திரும்ப பெறமுடியாத நிலை கூட ஏற்படலாம் என்று மனுதாரர் தரப்பு வாதத்தை நிராகரிக்க முடியாது.
அதேநேரம், திரைப்படத்தை வெளியிட தடை விதித்தால், அது தயாரிப்பாளருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, லைக்கா நிறுவனம் ரூ.4.90 கோடியை ஐகோர்ட்டு தலைமைப்பதிவாளர் பெயருக்கு ரொக்கமாகவோ அல்லது வங்கி உத்தரவாதமாகவோ செலுத்திவிட்டு திரைப்படத்தை வெளியிடலாம். இந்த தொகையை செலுத்தும்வரை மலேசியாவில் இப்படத்தை திரையிட தடை விதிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டுள்ளார்.