‘தர்பார்’ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்கவில்லை – அமைச்சர் தகவல்
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகையின் போது வெளியாகும் பெரிய ஹீரோக்களின் படங்களை ரசிகர்கள் முதல் காட்சியிலேயே படத்தை பார்க்க விரும்புவார்கள் இதற்காக அதிகாலை சிறப்பு காட்சி திரையிடப்படும். ரஜினி, விஜய் இருவரது படங்களின் முதல் காட்சிக்கும் கடுமையான போட்டி நிலவும்.
ரஜினிகாந்த் காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் தர்பார் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. தர்பார் படத்தில் நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் தர்பார் படம் ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வருகிறது. 9, 10, 11, 12, 13 ஆகிய 5 நாட்களும் சிறப்பு காட்சியில் தர்பார் படத்தை திரையிட திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தர்பார் படத்தின் அனுமதி பெறாத கூடுதல் காட்சிகளுக்கு, தடைவிதிக்க வலியுறுத்தி தேவராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தமிழக அரசு விதிமுறைப்படி விடுமுறை காலங்களில் அனுமதி பெற்று 5வது காட்சியை காலை 9 மணிக்கு மட்டுமே திரையரங்குகளில் திரையிட முடியும்.
ஆனால் சென்னையில் உள்ள திரையரங்குகள் 6-வது காட்சி மற்றும் 7-வது காட்சி என்று நள்ளிரவு 1.00 மணி முதல் விடியற்காலை 4 மணி, 5 மணி, 6 மணி, 7 மணி என்று திரையிட உள்ளார்கள். இதனை தடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இதனால் தர்பார் சிறப்பு காட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது.
இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பேட்டி அளித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விடம் தர்பார் படம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:- ‘தர்பார்‘ திரைப்படம் வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது. அந்த திரைப்படத்துக்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி கேட்டு, தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இதுவரையிலும் அரசிடம் விண்ணப்பிக்கவில்லை. வழக்கமாக ஓரிரு நாட்களுக்கு முன்னதாக சிறப்பு காட்சி திரையிட அனுமதி கேட்டு விண்ணப்பிப்பார்கள்.
நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட அனைவரின் திரைப்படங்களுக்கும் சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதில் அரசு எந்த பாகுபாடும் பார்த்தது கிடையாது. ‘தர்பார்’ திரைப்படத்துக்கு சிறப்பு காட்சி திரையிட அதன் தயாரிப்பாளர் அரசுக்கு விண்ணப்பிக்கும்போது, முதல்அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று ஆலோசித்து பரிசீலிக்கப்படும்.
‘தர்பார்‘ திரைப்படத்தில் பின்னணி இசை சேர்ப்புக்கு தமிழக கலைஞர்களை புறக்கணித்து, வெளிநாட்டு கலைஞர்களை சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு திரைப்படத்தில் யார் பணி புரியலாம்? என்பது அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனரின் விருப்பம் ஆகும். இதில் அரசு தலையிடுவது திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் உரிமைகளை பறிப்பதாக அமைந்து விடும்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.