சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி பா.ஜ.க. கட்சி சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சாலையில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.
இதற்கிடையே இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட பா.ஜ.க.-வினர் முயற்சித்தனர். தொடர்ந்து, நுங்கம்பாக்கம் பூங்காவை கடந்த செல்ல அனுமதி இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
மேலும், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர், போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 800 நபர்கள் மீது 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல் , முறையற்று தடுத்தல், பொதுத் தொல்லை தருதல் உள்ளிட்ட பிரிவுகளில் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.