இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 1989-ம் ஆண்டு நவம்பர் 15-ந் தேதி இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகம் ஆனார். 2013-ம் ஆண்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தெண்டுல்கர் டெஸ்டில் அறிமுகமாகி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி தெண்டுல்கர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
1970 மற்றும் 1980-களில் டெஸ்ட் கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தும் வகையில் அதிக வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். அவர்களின் பந்து வீச்சு ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கக்கூடியதாகவும், பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கும் வகையிலும் இருந்தது. ஆனால் தற்போது தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். இதனால் டெஸ்ட் போட்டியின் தரம் குறைந்து விட்டது. இது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு நல்லதல்ல. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் தரம் உயர வேண்டியது அவசியமானதாகும். கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தும் ஆணி வேர் ஆடுகளங்கள் தான் என்பதை நான் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் ஓரளவு ஒத்துழைக்கும் ஆடுகளத்தை நாம் வழங்கினால், அது பேட்டிங், பந்து வீச்சுக்கு இடையே சரிசம போட்டி அளிக்கும் வகையில் இருக்கும். இந்த நடுநிலை தன்மை தவறும்போது போட்டி பலவீனம் அடையும். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தரமான ஆடுகளங்கள் அவசியமாகும்.
ஐ.பி.எல். போட்டியில் ஒருவர் சிறப்பாக செயல்பட்டால் அவரை சர்வதேச 20 ஓவர் போட்டிக்கான அணியில் சேர்க்கலாம். அதேநேரத்தில் ஐ.பி.எல். போட்டியில் நன்றாக செயல்படும் ஒருவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்த்தால் அது கேள்விக்குறியாகி விடும். இது பும்ரா போன்ற திறமையான சில வீரர்களுக்கு விதிவிலக்காகும்.
5 தலைமுறை வீரர்களுடன் விளையாடிய ஒரே வீரர் நானாக தான் இருப்பேன். கபில்தேவ், ரவிசாஸ்திரி, ஸ்ரீகாந்த், வெங்சர்க்கார், அசாருதீன் ஆகியோருடன் முதலில் விளையாடினேன். அடுத்து கங்குலி, டிராவிட் ஆகியோருடனும், அடுத்தபடியாக யுவராஜ்சிங், ஹர்ஜபன்சிங், ஜாகீர்கான், ஷேவாக், நெஹரா ஆகியோருடனும், அதன் பிறகு சுரேஷ்ரெய்னா தலைமுறையினருடனும், தொடர்ச்சியாக விராட்கோலி, ரோகித் சர்மா, ரஹானே உள்ளிட்டோருடனும் இணைந்து விளையாடி இருக்கிறேன். வீரர்களின் ஓய்வறை கோவில் போன்றது.
இவ்வாறு அவர் கூறினார்.