நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார்.
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில்தான் வசித்து வந்தார். அங்கு தற்போது அவரது மனைவி தயாளு அம்மாள் உள்ளார்.
அவரை இன்று மனைவி துர்காவுடன் சென்று மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது வாசலில் நின்று மு.க.ஸ்டாலினை, கருணா நிதியின் மகள் செல்வி வரவேற்றார்.
மு.க.ஸ்டாலினுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. தேங்காயில் சூடம் ஏற்றியும் சுற்றினார்கள்.
தாயிடம் ஆசி பெற்றுவிட்டு திரும்பிய மு.க.ஸ்டாலின், மனைவி துர்காவுடன் எதிர் வீட்டுக்கு சென்றார். அங்கு சில நிமிடங்கள் மு.க.ஸ்டாலினும், துர்காவும் அந்த வீட்டில் இருந்தவர்களிடம் நலம் விசாரித்தனர்.
சிறு வயதில் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் தெருக்களில் விளையாடியவர். இதனை நினைவுகூரும் வகையில் பால்யகால நண்பர் ஒருவரையும் அவர் சந்தித்தார்.
கோபாலபுரம் வீட்டில் இருந்து அறிவாலயத்துக்கு காரில் புறப்பட்ட மு.க.ஸ்டாலின், வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த தனது பால்ய கால நண்பர் ராமச்சந்திரனை அழைத்து பேசினார். அப்போது இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர்.இதன் பிறகு மு.க.ஸ்டாலின் அங்கிருந்து சென்றார்.
பின்னர் ராமச்சந்திரன் கூறும் போது, ‘‘மு.க.ஸ்டாலினுடன் சிறுவயதில் ஒன்றாக தெருக்களில் இந்த பகுதியில் கோலி விளையாடி இருக்கிறேன். அப்போது அவரது அண்ணன் அழகிரியும் எங்களோடு சேர்ந்து விளையாடுவார். எப்போது பார்த்தாலும் நின்று பேசாமல் மு.க.ஸ்டாலின் செல்ல மாட்டார். அந்தவகையில் பழைய நினைவுகளை இருவரும் அசைபோட்டுக் கொண்டோம்’’ என்று தெரிவித்தார்.