X

தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட சீலை நீக்க வேண்டும்! – நீதிமன்றம் உத்தரவு

நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அவருக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சிலர் போர்க்கொடி தூக்கினார்கள்.

நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என்று சங்க வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதோடு சங்க அலுவலகத்தைப் பூட்டினார்கள். விஷால் நேற்று காலையில் தயாரிப்பாளர் சங்கத்துக்குப் போடப்பட்ட பூட்டை உடைத்து, உள்ளே செல்ல முற்பட்டார்.

அப்போது அவருக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து விஷால் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த விவகாரம் சங்கம் தொடர்புடையது என்பதால் இதுபற்றி உரிய முறையில் விசாரிக்க வருவாய் துறையினருக்கு போலீசார் பரிந்துரை செய்தனர். இதன் காரணமாக சங்க விதிகளுக்கு உட்பட்டு தயாரிப்பாளர் சங்கம் செயல்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய பதிவுதுறை அதிகாரிகள் அண்ணாசாலை அலுவலகத்திலும் விசாரணை நடத்தினர். பின்னர் அண்ணாசாலை அலுவலகத்துக்கும் சீல் வைக்கபபட்டது.

இதுகுறித்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்ததாவது, ‘’சட்ட விரோதமான 8 மணி நேர காவலுக்குப் பிறகு, வெளியே வந்துவிட்டேன். நான் செய்யாத தவறுக்குப் பாதிக்கப்பட்டேன். எங்கள் சொந்த அலுவலகத்திற்குள் நுழையவிடவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

சட்ட விரோதமாக கதவுகளைப் பூட்டியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. நிச்சயம் இது நியாயமற்றது. நீதித்துறையின் மிது நம்பிக்கை இருக்கிறது. இன்று நடந்ததற்கு எனக்கு நீதி கிடைக்குமென நம்புகிறேன்.’’ என்று பதிவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷால் தரப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், சங்கத்துக்கு போடப்பட்ட சீலை அகற்றுமாறு வருவாய் கோட்டாட்சியர், பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.