தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு போட்டவர்கள் நினைப்பது நடக்காது – விஷால்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக நடிகர் விஷால் இருந்து வருகிறார். தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு குழு அவருக்கு எதிராக இன்று சங்க வளாகத்தில் போராட்டம் நடத்தினார்கள்.

நண்பகல் 12 மணியளவில் தயாரிப்பாளர்கள் டி.சிவா, கே.ராஜன், ஏ.எல்.அழகப்பன், ஜே.கே.ரித்திஷ், எஸ்.வி.சேகர், உதயா, விடியல் சேகர் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க வளாகத்துக்கு வந்து, கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

சங்கத் தலைவர் விஷால் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சுய லாபத்துடன் செயல்படுகிறார். இந்த ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டத்தை இன்னும் கூட்டவில்லை. பட வெளியீட்டை ஒழுங்குபடுத்துவதற்காக விஷால் அமைத்த குழு பாரபட்சமாக நடந்துகொள்வதால் பட வெளியீட்டில் சிக்கல் நிலவுகிறது. கடந்த நிர்வாகம் சங்கத்துக்கு வைத்து சென்ற வைப்புத்தொகையில் மோசடி நடந்துள்ளது. பைரசியை ஒழிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடித்தினார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்க அறைகளுக்கு பூட்டு போட்டனர். விஷால் உடனடியாக வரவேண்டும் என்று தொடர்ந்து போராடினார்கள். சங்கத்துக்கு பூட்டு போட்டு சாவியை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் கொடுத்தனர்.

தற்போது நடிகர் விஷால் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘தயாரிப்பாளர் சங்க கணக்கு விவரங்கள் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும். தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டவர்கள் நினைப்பது நடக்காது. போராட்டம் நடத்தியவர்கள் ஏற்கனவே பொதுக்குழுவில் பிரச்னை செய்தவர்கள்’ என்று கூறியிருக்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools