தயாரிப்பாளர்கள் குறித்து தவறாக பேசிய தனுஷ்! – தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு
நடிகர் தனுஷ் சமீபத்தில் சென்னையில் நடந்த பட விழாவில் பேசும்போது, “இந்த காலத்தில் ஒரு தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்குவது என்பது சாதாரண விஷயம் இல்லை. அது பெரிய வேலையாக இருக்கிறது. பல தயாரிப்பாளர்கள் ஏமாற்றி இருக்கிறார்கள். ஏமாற்றிக்கொண்டும் இருக்கிறார்கள்” என்றார்.
இது சர்ச்சையாகி உள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் கூறும்போது, “விஜய், அஜித்குமார் போன்றவர்கள் தயாரிப்பாளர்களுக்கு உதவுகிறார்கள். தனுஷால் யாரும் லாபம் அடையவில்லை. துள்ளுவதோ இளமை தொடங்கி வடசென்னை வரை தனுஷை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் இப்போது சினிமா துறையில் இல்லை” என்றார்.
தயாரிப்பாளர் கே.ராஜன் கூறியதாவது:- “தனுஷை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்து உள்ளனர். கடன் வாங்கித்தான் பட அதிபர்கள் படம் எடுக்கின்றனர். கதாநாயகன் மற்றும் டைரக்டர் செய்யும் தவறுகளால் படப்பிடிப்பு காலதாமதமாகி வட்டி அதிமாகி விடுகிறது. ரூ.10 கோடிக்கு எடுத்த படத்தை ரூ.8 கோடிக்குத்தான் விற்க முடிகிறது. இதனால் வீடு சொத்துகளை இழந்து நிற்கிறார்கள்.
ஆனால் தனுஷ் போன்ற நடிகர்கள் ஆடம்பர கார்களில் வருகிறார்கள். தயாரிப்பாளர்கள் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள் என்று சில நடிகர்கள் சொந்தமாக படம் எடுத்து நஷ்டமடைந்த நிலைமையும் இருக்கிறது. எனவே தயாரிப்பாளர்கள் மீது குற்றம் சாட்டுவதை தனுஷ் நிறுத்த வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் சில தயாரிப்பாளர்கள் தனுஷூக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஹேஷ்டேக்கை உருவாக்கி அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.