தம்பி- திரைப்பட விமர்சனம்
‘பாபநாசம்’ என்ற வெற்றிப் படத்தை கொடுத்த ஜீத்து ஜோசப், இயக்கத்தில் ஜோதிகா அக்காவாகவும், கார்த்தி தம்பியாகவும் நடித்திருக்கும் ‘தம்பி’ எப்படி என்பதை பார்ப்போம்.
அரசியல்வாதியான சத்யராஜியின் மகன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி 15 ஆண்டுகள் ஆகிவிடுகிறது. காணாமல் போன தம்பி நிச்சயம் திரும்பி வருவார், என்று அக்கா ஜோதிகா நம்பிக்கையோடு இருக்க, கோவாவில் ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் கார்த்தி, காணாமல் போன மகன் என்று கூறிக்கொண்டு சத்யராஜ் குடும்பத்திற்குள் நுழைய ஜோதிகாவும் அவரை தம்பி என்று நம்பி விடுகிறார்.
இதற்கிடையே, கார்த்தி தனது மகன் இல்லை என்ற உண்மையும், அவர் பணத்திற்காக தான் தனது மகனாக நடிக்கிறார், என்ற உண்மையையும் தெரிந்துக் கொள்ளும் சத்யராஜ், கார்த்தியை விரட்டியடிக்காமல் இருப்பதோடு, அவரைப் பற்றிய உண்மை தெரிந்தவர்களை கொலை செய்ய, மறுபக்கம் சத்யராஜின் மகன் என்று நினைத்து கார்த்தியை சிலர் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். இதனால், காணாமல் போன சத்யராஜின் மகன் குறித்து விசாரிக்கும் கார்த்திக்கு பல உண்மைகள் தெரியவர, அது என்ன என்பதும், தனது மகன் இல்லை என்று தெரிந்தும் கார்த்தியை சத்யராஜ் ஏன் காப்பாற்றுகிறார், என்ற சஸ்பென்ஸும் தான் படத்தின் மீதிக்கதை.
முதல் பாதி காமெடி, இரண்டாம் பாதி சீட் நுணியில் உட்கார வைக்கும் சஸ்பென்ஸ் என்று குடும்பத்தோடு பார்க்க கூடிய ஒரு படமாக இயக்குநர் ஜீத்து ஜோசப் திரைக்கதை அமைத்திருக்கிறார்.
கார்த்தி, திருடனாகவும், அன்பான தம்பியாகவும் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார். ஒரு குடும்பத்தை ஏமாற்ற வந்தவர், திடீரென்று அந்த குடும்பம் மீது உண்மையான அன்பு செலுத்தும் இடங்களில் செண்டிமெண்ட் நடிப்பால் கவர்கிறார்.
கார்திக்கு அக்காவாக நடித்திருக்கும் ஜோதிகாவின் நடிப்பு காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது. காணாமல் போன தம்பி திரும்பி வந்தாலும், ஒருவித அமைதியோடு படம் முழுவதும் வலம் வரும் ஜோதிகா, க்ளைமாக்ஸில் அதற்கான காரணம் வெளிப்படும் போது, நடிப்பால் மிரட்டுகிறார்.
கார்த்தி மற்றும் ஜோதிகா கதாப்பாத்திரத்திற்கு இணையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜின் நடிப்பு இயல்பாக இருக்கிறது.
கார்த்திக்கு ஜோடியாக நடித்திருக்கும் நிகிலா விமலுக்கு படத்தில் முக்கியத்துவம் இல்லை. காதலியாக அவ்வபோது தலைகாட்டிவிட்டு போகிறார்.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையுடன் பயணித்திருக்கிறது. ஆர்.டி.ராஜேசேகரின் கேமராவும் கதையுடனேயே பயணித்திருக்கிறது.
சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்றாலே திரைக்கதை வேகமாக இருக்க வேண்டும், என்பது தான் லாஜிக். ஆனால், அந்த லாஜிக்கை உடைத்திருக்கும் இயக்குநர் ஜீத்து ஜோசப், நிதானமான போக்கில் திரைக்கதை அமைத்ததோடு, அதை சுவாரஸ்யமாகவும் நகர்த்தி செல்கிறார்.
முதல் பாதியை கலகலப்பான காமெடியோடு நகர்த்தி செல்லும் இயக்குநர் ஜீத்து ஜோசப், இரண்டாம் பாதி முழுவதையும் சஸ்பென்ஸாக நகர்த்தி செல்வதோடு, க்ளைமாக்ஸில் யாரும் எதிர்ப்பார்க்காத ட்விஸ்ட்டை வைத்து அசத்தியிருக்கிறார்.
இவர் தான் குற்றவாளியாக இருப்பார், என்று நாம் ஒருவரை யூகிக்க, இயக்குநர் அதை பொய்யாக்கி, சஸ்பென்ஸை உடைக்கும் போது ரசிகர்கள் கைதட்டுகிறார்கள்.
மொத்தத்தில், ‘தம்பி’ படத்தை நம்பி பார்க்கலாம்.
-ரேட்டிங் 3.5/5