தமிழ்ப்புதல்வன் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மாணவ-மாணவிகள் உயர்கல்வி படிக்கும் நோக்கத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு பள்ளிகளில் படித்து விட்டு பின்னர் உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து விட்டு உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

தமிழ்ப்புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (9-ந் தேதி) கோவையில் தொடங்கி வைக்கிறார். கோவை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் பங்கேற்று அவர் இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

மேலும் இந்த விழாவில் கோவை செம்மொழி பூங்கா வளாகத்தில் அமைக்கப்படும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் ஆகிய வளர்ச்சித்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.40 கோடி மதிப்பில் கட்டப்பட்ட உயிரியல் துறை மற்றும் சமூக அறிவியல் துறைக்கான புதிய கட்டிடம், கோவை வ.உ.சி. மைதானம் அருகே ரூ.1 கோடியில் கட்டப்பட்ட உணவு வீதி, புலியகுளம் அரசு கல்லூரியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தையும் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

விழா முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை உக்கடம் செல்கிறார். உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் வரை ரூ.481 கோடியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள மேம்பாலத்தை திறந்து வைக்கிறார். பின்னர் அந்த மேம்பாலத்தில் அவர் காரில் பயணிக்க உள்ளார். அங்கிருந்து கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூருக்கு செல்கிறார். அங்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 8 அடி உயர உருவ வெண்கல சிலையை திறந்து வைக்கிறார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள 116 அடி உயர கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடியேற்றி வைக்கிறார். நூலக கட்டிடத்தையும் திறந்து வைக்கிறார்.

கோவையில் நாளை 3 இடங்களில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு காலை 11 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு கோவை அரசு கலைக்கல்லூரிக்கு சென்று விழாவில் பங்கேற்கிறார். 3 விழாக்கள் முடிந்த பின் மீண்டும் கோவை விமான நிலையம் வரும் மு.க.ஸ்டாலின் பிற்பகலில் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவை மாவட்ட தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். முதலமைச்சர் வந்து செல்லும் அனைத்து இடங்களிலும் திரளானோர் கூடி அவருக்கு வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளனர்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. விமான நிலையம், கோவை அரசு கலைக்கல்லூரி மைதானம், உக்கடம், கணியூர் மற்றும் அவர் காரில் வந்து செல்லும் இடங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools