Tamilசெய்திகள்

தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் அதீதி இழைக்கிறார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நடைபெற்ற திமுக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர்
பேசியதாவது:

நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை மட்டும் நாம் நிறைவேற்றிக் காட்டினால், தமிழ்நாடு தலைநிமிரும் என்பது மட்டுமல்ல, தலைசிறந்த மாநிலமாக இந்தியாவிலேயே முதல் மாநிலமாக
மாறும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியான நிதிநிலை அறிக்கை இது.

ஆளும்கட்சியாக இருந்தாலும் தமிழகத்துக்கு பெற வேண்டிய உரிமைகளைத் தைரியமாக வாதாடியும் போராடியும் பெறுவதற்கு நாங்கள் தயங்கமாட்டோம்.

நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறுவதற்காக சட்டமுன்வடிவைத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து இரண்டு முறை நிறைவேற்றி அனுப்பி இருக்கிறோம்.

அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் வேலையைக் கூட சரியாகப் பார்க்க ஆளுநர் மறுப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.

தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒன்றிய அரசு விடுவித்தாக வேண்டும் என்று பிரதமர் மற்றும் நிதி அமைச்சரிடத்தில் கோரிக்கை வைத்துவிட்டு வந்திருக்கிறேன்.

இதே கோரிக்கையை நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களவையிலும் – மாநிலங்களவையிலும் குரல் எழுப்பி வருகிறார்கள்

இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்தான். அப்படித்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. மாநில அரசுகளை புறக்கணிப்பதன் மூலமாக ஒரு கற்பனையான இந்தியாவை
உருவாக்க நினைக்கிறார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்னால், இந்தி மொழியை ஆதரித்தும், இந்தியர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள இந்தியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் சொல்லி
இருக்கிறார்கள்.

இந்தி மாநிலம் மட்டும் அவருக்கு போதுமா? இந்திய மாநிலங்கள் அனைத்தும் வேண்டாமா? என்று நான் கேள்வி எழுப்பினேன். நான் மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சித்
தலைவர்களும் இதே கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.

கேரள மாநிலத்தில் நான் பேசுகிறபோது, ஒரு ஒற்றைத்தன்மை கொண்ட இந்தியாவை உருவாக்க பா.ஜ.க. நினைக்கிறது என்று கடுமையாக விமர்சித்து பேசினேன். இந்தியா என்பது வேற்றுமையில்
ஒற்றுமை கொண்ட நாடு. இது இத்தனை ஆண்டுகளாக நிலைபெறுவதற்கு இந்தத் தன்மைதான் காரணம்.

எனவே, தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் நமக்கு இந்தியாவின் பன்முகத்தன்மையை, மதச்சார்பின்மையை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் இருக்கிறது.

நம்முடைய சமூகநீதியை மற்ற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கி இருக்கிறது. நம்முடைய மாநில சுயாட்சியை மற்ற மாநிலங்களும் பேசத் தொடங்கி இருக்கிறது.

நாம் இதுவரை பேசிய மொழி உரிமையை பிறமாநிலத் தலைவர்களும் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். நம்முடைய பல்வேறு திட்டங்களை, பிறமாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில்
அமல்படுத்தத் தொடங்கி இருக்கிறது. இவ்வாறு அவர் உரையாற்றினார்.