தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்பவர்களை ஆதரிக்க மாட்டோம் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
சென்னை ராயப்பேட்டையில் மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கட்சியில் சேர்ந்தவர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்தி பேசினார்.
அ.தி.மு.க.வில் சேர்ந்துள்ள உங்கள் அனைவருக்கும் நல்ல எதிர்காலம் உண்டு. நீங்கள் கடுமையாக உழையுங்கள். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வை பற்றி தொடர்ந்து தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
கிராமத்தை பார்க்காதவர் மு.க.ஸ்டாலின். அவர் பார்த்து வளர்ந்தது சென்னையில். உள்ளாட்சியில் எந்த திட்டமும் செய்யவில்லை என்று குறை கூறுகிறார்.
மு.க.ஸ்டாலின் இதற்கு முன்பு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர். துணை முதல்வராக பணியாற்றியவர். அவர் அதிகாரத்தில் இருந்த போது மக்கள் பிரச்சனையை கண்டு கொள்ளவில்லை.
அப்போது மு.க.ஸ்டாலின் மக்கள் குறைகளை தீர்த்திருந்தால் சிறந்த அரசியல்வாதி என்று கூறி இருக்க முடியும்.
முன்பு கிராமங்களுக்கு செல்லாத இவர் இப்போது கிராமங்களுக்கு சென்று குறைகளை கண்டு பிடித்து பேசுகிறார்.
உள்ளாட்சி தேர்தலை நடத்தாததற்கு அ.தி.மு.க. தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார். ஆனால் அது உண்மையல்ல.
அம்மா ஆட்சி காலத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த ஏற்பாடு செய்து அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் தி.மு.க.தான் கோர்ட்டுக்கு சென்று உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் தடை வாங்கியது.
உள்ளாட்சி தேர்தலை நாங்கள் தள்ளி வைத்ததாக மு.க.ஸ்டாலின் தவறான செய்தியை பரப்புகிறார்.
கிராமம் முதல் நகரம் வரை குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி, கழிவுநீர் வசதி என அனைத்து அடிப்படை வசதிகளையும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப அ.தி.மு.க. அரசு செய்துகொடுத்து வருகிறது.
அரசியல் ரீதியாக சந்திக்க முடியாத தி.மு.க. கொல்லைப்புறம் வழியாக மக்களை குழப்பி வருகிறது. ஆனால் அ.தி.மு.க. மக்கள் பிரச்சனையை தீர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
தி.மு.க.வை பொறுத்த வரை கூட்டணிக்கு நீ வா… நீ வா… என அழைக்கும் நிலையே உள்ளது.
ஆனால் எங்களை பொறுத்தவரை மத்தியில் தமிழ்நாட்டு மக்களுக்கு யார் நன்மைகள் செய்கிறார்களோ அவர்களைதான் ஆதரிப்போம். அவர்கள்தான் மத்தியில் வர வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்பவர்களை ஆதரிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் பேசினார்.