Tamilசெய்திகள்

தமிழ்நாட்டுக்கு ஏற்ற கல்வி கொள்கையை அமைக்கப்பட்ட குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்

தமிழ்நாட்டின் மரபுக்கேற்ப மாநில கல்விக்கொள்கை ஒன்றை உருவாக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 1-ந்தேதி ஒரு குழுவை அமைத்திருந்தார். ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் அமைந்துள்ள இந்த குழுவில் உறுப்பினர்களாக பேராசிரியர் ஜவஹர்நேசன், ராமானுஜம், சுல்தான் இஸ்மாயில், ராம சீனுவாசன், முனைவர் அருணா ரத்னம், எழுத்தாளர் ராமகிருஷ்ணன், செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாசன், கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலு, அகரம் அறக்கட்டளை தலைவர் ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

குழுவின் உறுப்பினர் செயலராக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ தமிழக அரசு எதிர்த்து வருவதால் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த 13 பேர் கொண்ட குழுவினர் இன்று தலைமை செயலகம் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவரது ஆலோசனையை கேட்டு அறிந்தனர்.

அதன் பிறகு தலைமை செயலக கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்கால குறிக்கோளுக்கு ஏற்ப மாநிலத்திற்கான தனித்துவமான மாநில கல்வி கொள்கையை வகுக்க மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் என்று பல தரப்பட்டோரிடம் கருத்துக்களை பெற வேண்டும் என்றும் தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து கல்விக் கொள்கையை வடிவமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அது தொடர்பாக ஆலோசித்தனர்.

உலகளாவிய கல்வி தேவைக்கேற்ப வளரிளம் பருவத்தினருக்கான கல்வி, தொழில்நுட்பங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு கல்விக்கொள்கையை வடிவமைக்க வேண்டும் என்றும் வேலைவாய்ப்புக்கேற்ற பாடத்திட்டத்தை வடிவமைக்க வேண்டும் என்றும் சமத்துவமான கல்வியை தரும் வகையில் கல்விக்கொள்கையை வடிவமைக்க வேண்டும் என்றும் விதிகள் வகுத்து கொடுக்கப்பட்டுள்ளதால் அது குறித்தும் கருத்து பரிமாற்றம் செய்தனர்.

தேர்வு முறைகளில் சீர்திருத்தம் கொண்டு வரும் வகையிலும் பள்ளிப் படிப்பை முடிப்போர் அனைவரும் உயர்கல்வியை தொடரும் வகையில் கல்விக்கொள்கை அமைய வேண்டும் என்ற கருத்துக்கேற்ப ஆலோசனை மேற்கொண்டனர். ஒரு வருட காலத்தில் கல்விக்கொள்கையை வடிவமைத்து, அதை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் துணைக்குழுவை உருவாக்கி கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.